Monday, September 29, 2014

ஓலைச்சிலுவை- கேசவமணி

டாக்டர் சாமர்வெல் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மோர் லேண்டில், கெண்டால் என்ற ஊரில் பிறக்கிறார். ஷேக்ஸ்பியர் மீது காதல் கொண்ட இவர் இராணுவத்தில் பணியாற்றி முதல் உலகப்போரில் பங்கெடுக்கிறார். போரின் பயங்கரம் அவரை அமைதியை நாடச்செய்கிறது. தனது நண்பர்களுடன் மலையேற்றம் செய்யும் போது, நண்பர்கள் அனைவரும் பனிமலை பெயர்ந்து விழுந்துவிட, தான் எடுத்த முடிவால் இவ்வாறு ஆயிற்றே என்று வருந்துகிறார். இந்தியாவில் பல இடங்களில் பயணம் செய்து, நெய்யூர் வந்தவர் அங்கிருந்த மருத்துவமனையின் நிலைமை அறிந்து, லண்டனில் தனக்கிருந்த பிரகாசமான வாய்ப்பை உதறிவிட்டு, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார். அவர் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடுகிறது. அங்கிருந்த சாதாரண மக்களுக்காக அவர் ஆற்றிய பணியைச் சொல்வதே ஜெயமோகனின் ஓலைச்சிலுவை.

ஒரு மனிதன் இறந்துபோகிறான். அவனை மதம் மாற்றித்தான் அடக்கம் செய்வோம் என்று பாதிரியார் சொல்லும்போது அவர் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது. மனிதனின் இயலாமையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வது எவ்வளவு பெரிய கயமைத்தனம் என்று தோன்றுகிறது. செத்தவருக்கு இப்படியெனில், உயிரோடு இருப்பவருக்கு உணவு, படிப்பு, வேலை கிடைக்கும் என்று சொல்வது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. காலங்காலமாக விதைக்கப்பட்டு வளர்ந்திருக்கும் ஒரு நம்பிக்கையைச் சிதைத்து, வசதிகளைச் செய்துகொடுத்து, மதமாற்றம் என்ற பெயரால் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. 

கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை எல்லா செயல்களிலும் நமக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. இருந்தும் ஒவ்வொரு செயலிலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறோம். ஒவ்வொரு நம்பிக்கையும் பொய்த்துவிட அடுத்தடுத்து மழைக் காளான்களாக நம்பிக்கைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்காக இதுவரை இருந்த கடவுளை தூக்கி எறிந்துவிட முடியுமா என்ன? “அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த தெய்வங்க நினைச்சா அப்படி நடக்கட்டு” என்று சிறுவனின் அம்மா, இறந்துபோன தன் கணவனை விட்டுச் செல்லுவது நமக்கு நியாயமாகவே படுகிறது.

அந்த வீட்டின் குடும்பச் சூழல், வறுமையின் கொடுமை இவையெல்லாம் மதமாற்றத்திற்குச் சரியான காரணமாக நாம் சமாதானம் அடையாத போது, கதையின் இந்தப் பகுதி வருகிறது: “நான் கொஞ்சம் தூக்க மயக்கத்தில் ஆழந்தபோது கடைக்குட்டி தங்கம்மை எழுந்து என்னவோ சொன்னாள். நான் எழுந்து பார்த்தேன். அவள் தூக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் சிணுங்கிக் கொண்டு மழுங்கலாக ஏதோ சொன்னபடி கையால் எதையோ செய்வது தெரிந்தது. கண்கள் சிலகணங்களில் தெளிந்தபோது அவள் என்ன செய்கிறாள் என்று கண்டேன். அவள் எதையோ அள்ளி அள்ளித் தின்றுகொண்டிருந்தாள். சப்புக்கொட்டியபடி மென்றாள். கையை நக்கினாள். திடீரென்று விழித்துக்கொண்டவள் போல என்னைப் பார்த்து வாயை மட்டும் அசைத்தாள். ‘அண்ணா’ என்றாள். ‘உறங்குடீ’ என்றேன் அதட்டலாக. புன்னகையுடன் ‘கஞ்சி இருக்கு’ என்றாள்.”

இந்தக் காட்சி நம்மை வெகுவாக உலுக்கிவிடுகிறது. மதம் என்பது பற்றியோ அதன் மாற்றம் என்பது பற்றியோ பேசுவதற்கும் எழுதுவதற்கும் எளிதாகவே இருக்கும். ஆனால் நிதர்சனம், அதுவும் கனவில் வெளிப்படும் நிதர்சனம், மிகவும் கொடியது. அதை இல்லாமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். தூரத்தில் சௌகரியமான இடத்தில் அமர்ந்துகொண்டு, எதையும் சொல்லலாம். ஆனால் நிஜம் பயங்கரமானது. அந்த பயங்கரத்தை, அச்சத்தை நீக்குபவர் யாராக இருப்பினும் அவரிடம் தஞ்சம் புகுவது உயிரின் இயல்புதானே? அதையே கதைசொல்லியின் குடும்பம் செய்கிறது. அவன் ஜேம்ஸ் டேனியல் ஆகிறான். இருந்தும் வளர்ந்து விருட்சமாய் நிற்கும் ஒரு நம்பிக்கையை முற்றிலுமாக வெட்டிச் சாய்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே ஒட்டுதலும் பற்றுதலும் ஏற்படுவது சிரமம்தான். அதற்காக சுயநலத்தின் பொருட்டு எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டுவிட்டு விசுவாசமாக இல்லையென்றால் அது தவறல்லவா? அதற்கு என்னசெய்வது? அதற்குச் செய்வதற்கு ஏதுமில்லை, அந்தத் தருணத்திற்காகக் காத்திருத்திருப்பதைத் தவிர.

கிராமத்தில் காலரா பரவுகிறது. காலராவுக்குக் காரணம் கிளாத்தி மீன்தான் என்பதை கண்டறியும் சாமர்வெல் குடில்களின் முற்றங்களிலும் வீட்டு வாசல்களிலும் நின்று, “அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி கிறிஸ்து பேராலே சொல்லுது, கிளாத்தி சாப்பிடாதீங்கோ.... அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி உங்களேக் கையெடுத்துக் கும்புடுது... கிளாத்தி சாப்பிடாதீங்கோ” என்று மன்றாடுவது நம் உள்ளத்தில் சம்மட்டி கொண்டு அடிக்கிறது. மருத்துவம் ஒரு சேவை என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? மருத்துவத்தை தொழில் எனக்கருதும் இந்த நூற்றாண்டு மனிதர்கள் நாம். சாமர்வெல் காலராவில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார். மருத்துவத்தைவிட நோய் வராமல் தடுப்பது மருத்துவர்களின் முக்கிய வேலை என்பதை இன்றய மருத்துவர்கள் யாரும் லவேசமும் எண்ணிப் பார்ப்பதில்லை.

கையில் விளக்குடனும், மணியுடனும் கிராமங்களுக்குச் சென்று சந்துகள், குடுசை வீடுகள் என்று அலைவதும், பிணங்களைத் தேடி புதர்களிலும், ஓடைகளிலும் அலைந்து திரிந்து சாமர்வெல் ஆற்றும் காரியங்கள் வேறு எவரும் செய்ய முடியாதவை. மருத்துவர் என்பதன் முழுத் தகுதியும் அவருக்கே உரித்தானது. அவருடன் சேர்ந்து அலையும் டேனியல் சோர்ந்து போகிறான். காரணம் அவனுக்கு சேவை என்பதன் முழுப்பொருளும் இன்னும் அர்த்தமாகவில்லை என்பதோடு, கிறுஸ்துவோடு அவன் ஒட்டாமல் இருப்பதும் அவனை முழுமையாகச் செயல்படாமல் தடுக்கிறது. இந்நிலையில், தனது குழந்தை இறந்தவிட்டதாகக் கதறி அழும் பெண்ணிடம் குருவாயூரப்பன் படத்தை அவள் கையில் கொடுத்து, “இந்தா இருக்கு உன் குழந்தை. இனி இதாக்கும் உன் குழந்தை..” என்று சாமர்வெல் சொல்லுமிடத்தில் அவன் அடிபட்டவன் போலாகிறான். எல்லா மனிதர்களுக்கும் ஒரு உருகுநிலை இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அந்த உருகுநிலையின் உச்சத்தை எட்டுகிறான். உறங்கிக்கிடந்த அவன் ஆன்மா விழிக்கிறது.

அங்கிருந்து தள்ளாடியபடி செல்லும் அவன் தன் முன்னால் செல்லும் சாமர்வெல்லைப் பார்க்கிறான். எங்கிருந்து வந்தார் இந்த டாக்டர் தியோடர் ஹேவர்ட் சாமர்வெல்? இந்தியாவில், தமிழ்நாட்டில் ஊர்பேர் தெரியாத கடைக்கோடி கிராமத்தில் அவருக்கு என்ன வேலை? ஒரு பிச்சைக்காரனைப் போல வீடுவீடாகச் சென்று கூவுவதும், பிணங்களை அப்புறப்படுத்துவதும்தான் அவரின் பணியா? மனித வாழ்க்கையில் ஏதோ ஒன்று நம்மைப் புலப்படாத பாதையில் அழைத்துச் சென்று, ஆற்றவேண்டிய பணியை நமக்கு உணர்த்திச் செல்கிறது. ஆனால் அதை செவிமடுப்பவர்கள் எத்தனை பேர்? பலரும் தங்களின் சௌகரியம் கருதியே காரியங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, தன்னுடைய நலத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் யாரோ ஒரு மூன்று வயது பெண் குழுந்தை கொடுத்த ஓலைச்சிலுவையை கடவுளின் ஆக்கினையாகக் கொண்டு உழைக்கிறாரே இந்த மனிதர்? இவர் ஆற்றும் இந்த சேவை, அர்ப்பணிப்பு உணர்வு இவற்றுக்கு என்ன பொருள்? இது வெறும் உருவம் சம்பந்தப்பட்டதா? உருவமில்லாத ஒன்றல்லவா அது? அது எதுவாகத்தான் இருந்தால் என்ன? அதற்குப் பெயர் என்னவானால்தான் என்ன? அந்நேரத்தில், அவனது அந்தப் பார்வையில், அவனுள்ளே ஓடும் எண்ணங்கள் இதுவன்றி வேறு என்னவாக இருக்கும்?


அப்போது அவனெதிரே உருவம் ஒன்று, வெண்ணிற அங்கியில், ஓலைச்சிலுவையை அவனிடம் கொடுத்து மறைகிறது. இறைவனை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் இறைவன் நம்மை நோக்கி இரண்டு அடிகள் வைக்கிறான். நமது மனம் பக்குவப்படும் போது இறைவன் காட்சியளிக்கத் தயக்கம் காட்டுவதில்லை. ஏசுவைப் பலர்கூடிச் சிலுவையில் அறைந்தார்கள், சாமர்வெல் தன்னைத்தானே ஓலைச்சிலுவையில் அறைந்துகொண்டார் என்பதை உணர்ந்த அந்தக் கணத்தில் ஜேம்ஸ் டேனியல் தன்னையும் அதே ஓலைச்சிலுவையில் அறைந்துகொள்ளத் தயாராகிவிட்டான். தூரத்தில் சென்று கொண்டிருக்கும் அவரை எட்டிப்பிடிப்பதில் இனி அவனுக்கு சிரமம் ஏதுமிருக்காது, ஏனெனில் மேய்ப்பர்கள் எல்லோரும் இடைச்சாதி என்பதை அவன் புரிந்துகொண்டுவிட்டான்.

http://kesavamanitp.blogspot.in/2014/09/blog-post_29.html

No comments:

Post a Comment