Monday, September 1, 2014

சுந்தர வடிவேலன்,சுசீலா

ஜெ,
அப்படியே அமர்ந்து கொண்டு சோற்றை உருட்டினேன். அதை வாயில் வைக்கும்போது அதட்டலுக்காக காதும் உதைக்காக முதுகும் துடித்துக் காத்திருந்தன. முதல் கவளத்தை உண்டு விட்டு ஏனென்று தெரியாமல் எழப்போனேன்”
அதட்டியும் உதைத்துமே ஒரு பெரும் சமுகத்தை பல நுற்றாண்டுகள் அடிமைப் படுத்தி வைத்திருந்திருக்கிறோம் . குற்றவாளிக் கூண்டில் எல்லாருக்கும் இடம் உண்டு. குற்ற உணர்வும் சரிதான் சில நேரம்.
“ஒரு மகத்தான வனமிருகத்தால் மிச்சமின்றி உண்ணப்பட்டவன் போல உணர்ந்தேன்”. – என்ன முடிவுல இருக்கீங்க ஜெயமோகன். ஒவ்வொரு நாளும் இன்னைக்கு என்ன சொல்லி அழ வைப்பிங்க்லோனு தான் தோணுது உங்க வலைத்தளச் சுட்டியை சொடுக்கும் போதே.
ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கு. இது வரைக்கும் நீங்கள் வலைதளத்தில இட்ட பதிவுகளில இந்த(அறம் முதல்…) பதிவுகளுக்கு தான் அதிகமான வாசக கவனம் ஏற்பட்டிருக்கும்னு நெனைக்கிறேன். சரியா?
ஏன் இத்தனை பெரிய பிரவாகம கொட்டறீங்க? எது இதற்க்கான தூண்டுதல்?
நன்றிகளுடன்,
சுந்தரவடிவேலன்.
அன்புள்ள சுந்தரவடிவேல்
இந்தக்கதைகள் அனைத்துமே ஒரே ஊற்றில் இருந்து உருவானவை. பலசமயம் ஒரே வேகத்தில் முப்பது பக்கம் நீளமுள்ள் ஒருகதை எழுதி முடித்து இருபதாம் நிமிடத்தில் அடுத்த கதையை எழுதியிருக்கிறேன். எல்லா கருக்களும் பழையவை. எங்கோ கிடந்தவை. அந்தக் கதைக்கருக்கள் மேல் ஆவேசத்துடன் முட்டினேன். இரு கதைகள் பாதியில் கைவிட்டன. இரு கதைகள் முடிந்தும் சரியாக அமையவில்லை. பிற சிறகு கொண்டு எழுந்து வானில் தாங்களாகவே பறந்தன.
இந்த வேகத்திற்குப்பின்னால் உள்ள காரணம் என்ன என்றால் தெளிவாகச் சொல்லத்தெரியவில்லை. நான் நம்பியிருப்பவற்றின் அடிப்படைகளைப்பற்றிய ஆழமான ஐயத்தை சில நிகழ்ச்சிகள் மூலம் அடைந்தேன். என்ன மிஞ்சுகிறதென கணக்கிட ஆரம்பித்தேன்.
வரும் ஏப்ரலில் எனக்கு ஐம்பது வயதாகிறது. நான் வைத்திருப்பவை சொற்களா இல்லை நம்பிக்கைகளா இல்லை அடிப்பப்டையான உண்மைகளா என நானே உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. சின்ன விஷயங்களில் இருந்து விடுவித்துக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது
இல்லை சுந்தரவடிவேல். நீங்கள் நம் மக்களைப்பற்றிய அதிக நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். சினிமாவைப்பற்றிய சாதாரணப் பதிவுகளுக்கு வந்த வருகையாளர்களில் முக்கால்பங்கினர்கூட இக்கதைகளுக்கு வரவில்லை. மிஷ்கின் சம்பந்தமான வம்புகள் இணையத்தில் பெருகியநாட்களில் மிஷ்கினின் நந்தலாலா பற்றி நான் என்ன சொல்கிறேன் என்று தேடித்தான் அதிகம்பேர் இந்த தளத்துக்கு வந்தார்கள்.
இந்த சூழல் உருவாக்கும் அவநம்பிக்கைதான் இந்தக்கதைகளை எழுதும் அற எழுச்சி நோக்கி என்னை மீண்டும் தள்ளுகின்றன. யானைடாக்டர் எந்த நம்பிக்கையில் அந்த வாழ்க்கையை முழுமைசெய்தார் என்று தேடச்செய்கின்றன
ஜெ
அன்பின் ஜெ.எம்.,
குறிப்பிட்ட இந்தச் சிறுகதைகளின் கதை வரிசையில் என்னை உச்சி முதல் பாதம் வரை உலுக்கியெடுத்துக் கண்ணீர் சுரக்க வைத்தது இந்தப்படைப்புத்தான்..!.
சாதியின் கொடிய தீட்டை அதிகாரத்தாலோ , உயர்சாதிப்பெண்ணை மணப்பதாலோ கடக்க முடியாமல்….ஆதிக்கக் கிண்டல்களின் நுட்பமான விஷத்தீண்டல்களுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கும் காப்பனைப் போல நம்மைச் சுற்றிலும் (உமாசங்கர்,சிவகாமி என..) எத்தனை எத்தனை பேர்!
நாற்காலியில் அமர்ந்து விட்ட பிறகும் -அது ஏதோ கருணைப்பிச்சை என்று மட்டுமே எண்ணியபடி - ஆதிக்கம் செலுத்த வக்கற்ற/தகுதியற்ற அடிமை வம்சத்தின் சங்கிலிக் கண்ணியாகவே பாவிக்கும் உயர்/கீழ் அதிகாரிகளின் சாதி மேலாதிக்கம்.,சமூக/அலுவல் தரத்தின் அடுத்த படிக்கட்டை எட்டக் கணவனின் மூன்றெழுத்து துணையாவதால் அவனது சாதியைப் புறந்தள்ளும் மனைவி; முற்போக்கு முத்திரைக்காகவே ஏறுக்கு மாறான விடை வந்தும் மதிப்பெண் போடும் தேர்வுக்குழுவினர்…! மிகச் சரியான – அசலான பார்வைகள் அவை என்பதைத் தவிர வேறேதும் சொல்லத் தோன்றவில்லை…
என் மனதில் நிலைத்த சித்திரமாய் ஓலமிட்டுக் கொண்டிருப்பவள் மலத்திலும்,மூத்திர நாற்றத்திலும் துழாவித் துளைந்தபடி சோற்றிலும்.தீனியிலும் மட்டுமே வாழ்வையும் அதன் அர்த்தத்தையும் கண்டு கொண்டிருந்த அந்தத் தாய்தான்!
உயர் சாதியினராகக் கொள்ளப்பட்டவர்கள் மீது வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள நேரும் பயம் கலந்த மரியாதை – தாங்கள் வலுவில் ஏற்க நேர்ந்ததாக அமைந்து விட்டாலும் – அதைத் தாண்டியதாகத் தங்களை மேலாதிக்கம் செலுத்தும் மாற்றுசாதியின் மீதான அருவருப்பு(தான் புழங்கும் அழுகல் பண்டங்களை விட அவளுக்கு இதுவே அருவருப்பூட்டுகிறது),
வெறுப்பு ஆகியவற்றையே அவளது நனவிலி மனம் பதிவு செய்து வைத்திருக்கிறது.
மருமகள் மீதும்,அவள் நிறத்தின்மீதும்,தம்புரான்கள் தரிக்கும் வெள்ளுடையின் மீதும் ,அமரும் நாற்காலியின் மீதுமான காழ்ப்பாகவும்,பயமாகவும் ,அசூயையாகவும் அவளிடமிருந்து வெளிப்பாடு கொள்ளும் உணர்வுகள் அந்த ஆழ்மனத் தூண்டலினால் நேருபவையே..
தாய் தூண்டும் வெறுப்பு மற்றும் குரோத உணர்வுகள் அவனுக்குமே பதவியின் குறியீடாகிய நாற்காலியின் மீது ஒரு கையாலாகாத விரக்தி மனப்பான்மையை முதலில் தோற்றுவிக்கிறது;எனினும் அதைப்பற்றிக் கொண்டு , அதன் வழியாக மட்டுமே தன் மீது இதுகாறும்படர்ந்தவற்றைத் தான் கடந்து செல்லமுடியும்.., .போட்டித் தேர்வு எழுதுமாறு குரு தன்னைப் பணித்ததற்கு அதுவே காரணம் என்பதை அவன் புரிந்து கொள்ளும் வகையில் கதை நேர்மறையாக முடிவு பெற்றிருப்பது நம்பிக்கை தருகிறது
ஆயிரம் …லட்சம் நாற்காலிகளில் இந்த மைந்தர்கள் அமர்ந்து – அப்படி அமரும் எல்லாத் தகுதியும்தமக்கு உண்டு என்றும் உணரத் தொடங்கும்போதுதான்(குறிப்பாக தருமனின் மனைவிசுபா இதை அவனுக்குச் சுட்டிக் காட்டுகிறாள்) எத்தனையோ தலைமுறைகளாக நெஞ்சில் நெருப்புச் சுமந்தபடி இருக்கும் அவர்தம் அன்னையரின் அனல் அடங்கக்கூடும்..! பிராயச்சித்தம் என்று குரு குறிப்பிடுவதும் கூட இதுதானென்றே நினைக்கிறேன்.
.
கதையின் உணர்வு பூர்வமான கட்டங்களில் என்னை மிகவும் பாதித்த பகுதிகள்..
தாய்-மகன் சந்திப்பு முதலில் நிகழுமிடம்.
அழுகலை உண்டதால் மகன் சாவின் பிடியில் கிடக்கும் கட்டத்திலும் கூட…..அவனது முன் தலைமுறையை நினைவுகூர்ந்து ‘இவனும் அவர்களோடு போய்ச் சேர்ந்து விடலாகாதா’என்ற ஒரு கண நினைப்பு தகப்பனுக்குள் தலையெடுக்கும் அந்தக்கட்டம்…
அறியாத வரலாறுகளுக்குள் புதைந்து கிடக்கும் மானுட வாழ்வின் அவலமான, அற்புதமான, அற்பமான, விசித்திரமான கணங்களைப் புனைவுகளாக ஆவணப்படுத்தி வரும் தங்களுக்கு நன்றி…
அன்புடன்,
எம்.ஏ.சுசீலா
அன்புள்ள ஜெ,
நூறுநாற்காலிகள் கதை அச்சு அசல் அப்படியே என்னுடைய நண்பனின் கதை என்றால் நம்ப மாட்டீர்கள். இதேபோல ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் அவன். என்னுடன் அரசாங்க அதிகாரியாக ஆனான். அவனுடைய பெற்றோர்தான் அவனுடைய பிரச்சினை. அவன் அம்மா ஊரில் இருந்து சந்தர்ப்பம் கிடைத்தால் ஆபீஸுக்கு வந்து அவனுடைய கீழே வேலைசெய்யும் கிளார்க்குளிடமும் பியூன்களிடமும் ‘புள்ளைய பாத்துக்கிடுங்க சாமி…’ என்று கைகூப்பி கெஞ்சிக்கொண்டிருப்பாள். அவன் எவ்வளவோ சொன்னாலும் கேட்க மாட்டார்
அவனுடைய சாதியிலேயே அவனுக்குப் பெண்பார்த்தார்கள். படிக்காத பெண். ஒரு வகையிலும் அவளை அவனுக்கு பொருத்தமுடியாது. வயதும் மிக அதிகம். ஆனால் முறைப்பெண். சாதிப்பஞ்சாயத்திலேயே சாராயத்தை குடித்துவிட்டு அந்த பெண்ணைத்தான் அவன் திருமணம் செய்தாகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அவன் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டான். சாதிப்பஞ்சாயத்து கூடி அவனை விலக்கி வைத்தார்கள்.
அவன் நாநூறு கிலோமீட்டர் தள்ளி ஒரு ஊரிலே வேலைபார்த்தான். அவன் அப்பா வேண்டுமென்றே அங்கே வந்து அவனுடைய ஆபீஸ் வாசலிலேயே ஷேவ்செய்யும் கருவிகளுடன் அமர்ந்து தொழில் செய்வார். அவன் அம்மா அங்கே வந்து அவனிடம் ஊருக்கு வந்திரு தம்பி என்று கெஞ்சி மன்றாடுவார். ஆபீஸில் உள்ளவர்களிடம் தம்பிக்கு எடுத்து சொல்லுங்க சாமி என்று கெஞ்சுவார்.
அவன் தற்கொலை செய்துகொள்வதைப்பற்றிக்கூட நினைத்திருக்கிறான். கடைசியில் வேறு மாநிலத்தில் வேலை கிடைத்து அங்கே தப்பி போனான். நூறுநாற்காலிகள் கதையை அவனுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். உணர்ச்சிகரமான கதை. நன்றி
டி
[என்பெயரை வெளியிடவேண்டாம். அவனுக்காக]
அன்புள்ள டி,
நீங்கள் nhm என்று தேடினால் ஒரு தமிழ் செயலியை இறக்கிக்கொள்ள முடியும். தமிழில் எழுதலாம்
நூறு நாற்காலிகள் தங்கள் கதையேதான் என மூன்று தனிப்பட்ட கடிதங்கள் வந்திருக்கின்றன. குழந்தைக்கு எச்சிலை ஊட்டிய சம்பவம்கூட ஒருவர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. தருமபுரியில் இருக்கையில் என் நண்பர் ஒருவரும் இப்பிரச்சினைகள் வழியாகச் சென்றதை கண்டிருக்கிறேன்
நம் சூழலில் சமூக மாற்றத்தின் உருளைகள் நடுவே மனிதர்கள் ரத்தமும் சதையுமாக கூழாகிக்கொண்டிருக்கிறார்கள்
ஜெ

No comments:

Post a Comment