ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
கடந்த கும்பமேளாவிற்கு கிளம்பும் முன் என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் மூன்று டிராவல் பேக்குகளில் அடைத்து எனது நெருங்கிய நண்பனுக்கு அவன் வீட்டில் சென்று அளித்துவிட்டு கிளம்பினேன். தனியாக கிளம்பினேன் எந்த முன் பயண திட்டமும் இல்லாமல். இரண்டு மாத திட்டம் திரும்பிவர மூன்று மாதங்களானது. நண்பன் அதிகம் வாசிப்பு பழக்கம் இல்லாதவன். தங்கள் தளத்தைப் பற்றியும் எழுத்துக்களைப் பற்றியும் அதிகம் பேசுவேன். நான் அளித்த புத்தகங்களில் உங்களின் புத்தகங்கள் நாவல்கள் அனைத்தும் இருந்தது. அவன் வீட்டில் அலமாறியில் அடைத்து ஆங்காங்கே வைத்து இடம் மாற்றிக் கொண்டிருந்தார்களே தவிர ஏதும் எடுத்து படிக்கவில்லை என்று தெரிந்தது. வீட்டை சீரமைப்பு செய்து அதை ஓரிடத்தில் அடுக்கி வைத்து கண்ணில் தெரியுமாறு செய்தபின் அவர்களாகவே எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறம் தொகுப்பு படித்து ஓர் நாள் அவன் வந்து புலம்பியது நன்றாகவே நினைவிருக்கிறது. அவனது மனைவிக்கு சோற்றுக்கணக்கு, நூறு நாற்காலிகள் மிகவும் பிடித்திருந்து சொன்னதாக சொன்னான். அவனுக்கு மயில் கழுத்து தவிர அனைத்தையும் பற்றி கூறினான்.
அவனது மகன் 9வது மெட்ரிகுலேசன் படிக்கிறான். அவன் அவ்வப்போது சில புத்தகங்களை விரித்து வைத்து அமர்ந்திருப்பதை அவ்வளவாக இவர்கள் கண்டுகொண்டதில்லை. அவனது பள்ளியில் புத்தக வாசிப்பிற்கு சமீபத்தில் தேர்வு நடத்தியிருக்கிறார்கள். மாணவர்கள் படித்த பிடித்தமான புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும். ஏதாவது ஒன்றைப் பற்றி. பெரும்பாலோனோர் அவனது வகுப்பில் அனைவரும் ஆங்கில கதைபுத்தகத்திலிருந்து தான் படித்ததை சொன்னதாக கூறினான். இவனது மகன் அறம் தொகுப்பிலிருந்த “சோற்றுக்கணக்கு” கதையை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அது தனக்கு எப்படி இருந்தது என்று விமர்சனமாகவும் எழுதிக் கொண்டிருந்தானாம். அதை என் நண்பன் படம்பிடித்து எனக்கு வாட்ஸப்பில் பகிர்ந்து மகிழ்ந்தான். ( அதை இத்துடன் இணைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு )
அவனது மகன் எழுதியதை படிக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அறம் சென்று சேரும் கரங்களை உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களின் வழியே பார்த்து வியந்திருக்கிறேன். இங்கே ஒரு இளம் கரங்களில் சென்று அவனது மனதையும் நெகிழச் செய்யும் என்று எதிர்பார்த்ததில்லை. அற்புதமான ஆக்கம் அளித்தமைக்கு நன்றி.
புத்தகங்கள் என்றும் வீணாவதில்லை.
பிரேம்குமார்
மதுரை
No comments:
Post a Comment