Monday, December 29, 2014

அறம் வரிசையில்

அன்புள்ள ஜெ.,

நேற்று படித்த இந்த செய்தியில் உங்கள் அறம் வரிசை நாயகர் ஒருவரைக் கண்டேன்.. ஊடகத்திற்கே உரிய மிகைப்படுத்தல் இருக்கலாம்.. இருப்பினும் இதுபோன்ற தருணங்களே நம் அறத்தை ஒருபடி மேலே கொண்டு செல்கிறது போலும்...

<a href="http://timesofindia.indiatimes.com/world/pakistan/For-the-first-time-I-couldnt-control-my-tears-says-gravedigger-in-Peshawar/articleshow/45588243.cms">http://timesofindia.indiatimes.com/world/pakistan/For-the-first-time-I-couldnt-control-my-tears-says-gravedigger-in-Peshawar/articleshow/45588243.cms</a>

நன்றி
ரத்தன்

வணக்கம்,

நான் தாழக்குடி பள்ளத்தெருவில் இருந்து வெங்கடேஷ் எழுதுகிறேன். நான் உங்கள் சோற்று கணக்கு எனும் சிறுகதையை படித்து விட்டு உடனே அக்கணமே இக்கடிதம் எழுதுகிறேன்.

கதை மிகவும் அருமையாகவும் ஆழமாகவும் இருந்தது. கரடி கையையும் தாய் கை ஆகியது அழகு.

இது தான் நன் படிக்கும் உங்களுடைய முதல் கதை.

நம்ம ஊர்க்காரர் என்றதும் எனக்கு பெருமிதம்.சந்தோஷம்.

அறம் புத்தகத்தை கண்டிப்பாக இன்னும் இருநாட்களில் படித்து விடுவேன்.
எல்லா மக்களும் அறம் பெறட்டும்.

வாழ்த்துகள்.
நன்றி.

வெங்கடேஷ்

Wednesday, December 17, 2014

தோரோவும் யானைடாக்டரும்

மென்மையான செடியின் வேர்கள் கடினமான பாறைகளின் இடுக்குகளிலும், கடினமான நிலங்களிலும், ஒளி ஊடுருவமுடியாத இடங்களிலும், மலைகளின் அடிகளிலும் நுழைந்து செல்ல முடியும். யாராலும் தடுக்க முடியாது. அன்பும் செடியின் வேரைப்போல …

 --தோரோ

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு யானை டாக்டர் வழியாகத்தான் நான் உங்களை வந்தடைந்தேன். அப்போது நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஏதோ தொடர்பில் குக்கூ இயக்கத்தை சார்ந்த முத்து எனும் நண்பர் மூலம் யானை டாக்டரை ஒரு இரவில் வாசிக்க நேர்ந்தது. நான் வைத்திருந்த எல்லாவித நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. என்னால் கட்டுப்படுத்த முடியாத அழுகை. வெறும் பொருள் சார்ந்த நம்பிக்கை தகர்ந்து அறம் சார்ந்த நல்லுணர்வை நான் அக்கணம் உணர்ந்தேன். உங்களை நன்றியோடு அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.



சிவகுருநாதன்,

சென்னை.

Saturday, December 13, 2014

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- "யானை டாக்டர்



குழந்தைகள் தங்களுக்கு  கிடைத்த பிரியமான பரிசு பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து  அதனை கட்டி பிடித்து தான் உறங்கி போவர்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் இன்று எங்களின் மனநிலையும்.

மீண்டும் ஒரு முறை யானை டாக்டர் கதையினை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இது...

அப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்?

கதையினை வாசித்த அத்தனை நண்பர்களின் மனதிலும் புழுவும்,யானையும் நிச்சயம் வருடி கொண்டு இருக்கும்.  

டாக்டர்.கே போல தனது வாழ்வின் ஒரு நொடியினையாவது மற்ற உயிர்க்கு அர்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சியம் எழும்.  

ஆதியில் இயற்கையின் அத்துணை அம்சங்களுடன்  இணைந்து  வாழ்ந்த மனிதனின் வாழ்வு  எதனுடனும் வேறு படவில்லை.அவனுக்கு எறும்பும் யானையும்,தவளையும் சிங்கமும் அனைத்தும் உயிர்கள் தான்.மனித உயிர்  தான்  என்ற பெரியது என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்க முடியாது  அந்த மனிதனின் கால்கள் இந்த மண்ணின் ஈரத்தையும் கோடி கணக்கான பூச்சிகளையும்,தாவரங்களையும்  நிச்சயம் உணர்ந்து இருந்திருக்கும்.  

      உங்களின் இந்த படைப்பின் மூலம் நீங்கள்  பல மக்களின் மனதுக்கு மிக நெருக்கமானவராக மாறி உள்ளீர்கள்  .உங்களுக்கு  வந்து குவிந்த கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தான் இதற்கு சாட்சி.

கண்டிப்பாக மனித மனத்தின் ஆழங்களை சென்று அடையும் இந்த கதை .

புழுவினை பற்றிய இந்த 10 வரிகள் போதும் ,

’புழுக்களைப்பாத்து பயந்துட்டேள் என்ன?’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். ..

குண்டுக்குண்டாக மென்மையாக புசுபுசுவென்று ஆவேசமாகத் தின்றுகொண்டு நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மனம் மலைப்புறும். வெண்ணிறமான தழல்துளிகளா அவை? அறியமுடியாத மகத்துவம் ஒன்றால் அணுவிடை வெளி மிச்சமில்லாமல் நிறைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் என்று அப்போது தோன்றி புல்லரித்துவிடும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்த துளிக்கு உள்ளே இருக்கின்றன சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை"

பூச்சிகளைப்பற்றியும்  அதனுடனான  மனித மோதல்களைப் பற்றியும் யானை டாக்டர் பேசும் போது  நம்மாழ்வார் அய்யா ஆன்மா தான் உள்ளே புகுந்தது போல் தோன்றும்...
 யானை டாக்டர் கதையினை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம்  என்ற அய்யாவின்  வார்த்தைகள்  வழியாகவும் இந்த பணியினை முன்னெடுக்கிறோம் .

காட்டு யானையின் உலகமும் அது மனிதனின் மிக மோசமான செயல்களினால் பாதிக்கப்படும் விதங்களும் மேலும் கோவில் யானைகளின்  சலிப்பூட்ட கூடிய அனுதின வாழ்கையும் நாம் என்றும் உணர்ந்திருக்க மாட்டோம்.

"யானை டாக்டர்" கிருஷ்ண மூர்த்தி  அவரின் எளிய உருவமும் இந்த கதையாடலின் மூலமாக விவரிக்கப்படும் அவரின் பேச்சும் செயல் பாடுகளும் நம்மை நிச்சயம் ஒரு லட்சிய பாதையினை நோக்கி கூட்டி செல்லும்.அவரினை போன்ற அற்புத ஆன்மாவை  நமக்கு உன்னத கதையின் வழியின் மூலம் அறிமுகபடுத்திய ஜெயமோகன் அவர்களுக்கு  நன்றி ..

அதிகாரத்தாலும், எதை குறித்தும் அக்கறையற்ற  மனநிலையாலும் நிரம்பி வழியும் நம் மனதினை நிச்சயம் ஒரு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் நம் மன  நிலையை இந்த உண்மை கதை உருவாக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும்  இல்லை.  

அன்புடன் ,
ஸ்டாலின் ,
குக்கூ குழந்தைகள் வெளி .