Monday, September 1, 2014

குமரன், இளங்கோ

அன்பின் ஜெமோ,
நலம்தானே ?
அறம், சோற்றுக் கணக்கு ஆகிய கதைகளில் ஆரம்பித்து இப்போது நூறு நாற்காலிகளில் வந்து நிற்கிறேன். இன்னும் சில நாட்களில் இந்த கதை மாந்தர்கள் மறந்து போகலாம். ஆனால், இனிமேல் சாலைகளில், நாற்றம் வீசும் சாக்கடை ஓரங்களில் தங்கி இருக்கும் மக்களை பார்க்க நேர்ந்தால் இந்த கதைக் களன் கண்டிப்பாக வந்து போகும்.
இவர்களைப் போன்றவர்களின் நிலைமை எப்போது மாறும், ஒருவேளை நீங்கள் இறுதியில் முடித்தது போல நூறு நாற்காலிகளில் இவர்கள் உட்கார்ந்தால் நிலைமை மாறும் என்று நம்புவோமாக. இதில் கிராமம், நகரம் என்று இல்லை, எல்லா ஊரிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். நகரத்தில் என்ன சாதி என்று கேட்காமல் யாரும் வீடு கொடுப்பது இல்லை. தீட்டு என்ற தலைப்பில் நான் எழுதிய சில வரிகள் நினைவுக்கு வருகிறது, அந்த வரிகள்;
நான் இல்லாத பொழுதில்
வீட்டுக்கு வந்த நண்பன்
புத்தகம் கேட்க
“உள்ள வந்து எடுத்துட்டு போ”
என சொல்ல
அவன் புத்தகத்தை தேடும் சமயம்
“ஏம்பா.. நீ நம்ம சாதி தானே”
“இல்லைங்க”
“அப்புறம்… ? ”
“நான் வந்து.. நான் வந்து”
“மூஞ்சிய பாத்தப்பவே நெனச்சேன்… வெளிய போ”
அப்புறமாய்
வீட்டுக்குள் தெளிக்கப்பட்ட
மாட்டு சாணியின்
வாசம் இன்னும் போகவில்லை !
மனிதனை மனிதன் வெறுக்கும் தன்மையை என்னவென்று சொல்வது.
உயர் சாதிக் காரர்களிடம் மாட்டிக் கொண்டு தன் மகன் தவிப்பதாக, அவர்கள் அவனைக் கொன்று போடுவார்கள் என நினைக்கும் தாயின் எண்ணம் மகத்தானது என்றுதான் தோன்றுகிறது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது தானே.
சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம்
சோற்றைத் தவிர நாம் விரும்புவது வேறொன்றும் இல்லை அல்லவா? .
உங்கள் கதைகளும், வார்த்தைகளும் நிஜ உலகத்தை தரிசிக்க ஒரு வழி. நன்றிகள் ஜெமோ.
இளங்கோ
http://ippadikkuelango.blogspot.com
அன்புள்ள இளங்கோ
நன்றி
சாதியம் ஒரு கட்டத்துக்கு மேல் அகப்பிரச்சினைகளாக உருமாறிவிடும். அந்நிலையில் அது அனைவருக்குமே சிக்கலானதுதான். அதிலிருந்து வெளியேற அபாரமான சுயபரிசோதனை தேவைப்படுகிறது. இலக்கியம் அதற்கு உதவட்டும்
ஜெ
அன்புள்ள ஜெ,
நூறு நாற்காலிகள் ……..ஊமை செந்நாய்க்கு பிறகு என்னுள் அதிர்வுகளை உருவாக்கிய கதை. பதினாறு வருடங்களாக இந்திய கல்வி முறை உருவாக்கிய அடிமை மனப்பாங்கில் இருந்து வெளி வருவதே என் போன்ற நடுத்தர வர்க்கததினருக்கு முடிவதில்லை.பல நூற்றாண்டு அடிமை உணர்வை எதிர் கொள்வது என்பது ஒரு யுத்தம் போலவே. முதன் முறையாக ஆங்கில வழிக்கல்வி படித்து வந்த மாணவர்களை நான் பள்ளியில் சந்தித்த போது இது போன்ற ஒரு உணர்வை அனுபவித்துள்ளேன் . பல முறை என் போன்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்க்க வேண்டுமென்றே பல பேர் நிறைந்த உள்ளரங்கில் நாங்கள் தேர்ந்தெடுத்து பேச வைக்க பட்டோம். “மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு ” என்ற பெயரில் பல முறை மேடை ஏற்ற பட்டேன். புரிந்து கொள்ள முடியாத பல கேள்விகளும் ஏழனங்களும் என்னை நோக்கி உள்ளரங்கில் வீச படும் . அங்கு இருக்கின்ற ஆங்கில புலமை வாய்ந்த பெண்கள் சிரிக்கின்ற வரையில் கேள்விகள் தொடரும். கோப பட்டால் அது அவர்களை உற்சாக படுத்தும். அமைதியாக பதில் அளித்தால் ஏளனங்கள் இன்னும் அதிகமாகும். இனிமேல் மேடையே ஏறக்கூடாது என்று ஒதுங்கி நின்றால் அதுவும் தாழ்வு மனப்பான்மை ஆகி விடும். அப்போது உள்ளரங்கில் இருந்து வெளியே வந்து சிறு நீர் கழித்தால் உண்மையில் அது அமிலம் தான்.
ஆனால் இதை தாண்டி வருவது தான் ஒரு மாற்றம் பெறுகின்ற தலை முறையை சார்ந்தவனுக்கு முக்கியமான தருணம்.இந்த தருணத்தில் தான் ஆணவமும் கர்வமும் அவனுக்கு தேவை படுகின்றன. தன்னை பற்றிய உயர்ந்த , தர்க்கத்துக்கு இடமில்லாத சுய மதிப்பீடு தான் அவனுக்கு வேலி. அவமானங்களை கொண்டே அவன் உறுதியாக வேண்டும். அடுத்த அவமானங்களுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அவமானங்களின் வழியாக அவற்றை தாண்டி செல்ல முடியும்.
குமரன்.
அன்புள்ள குமரன்
நம்முடைய சொந்த அவமதிப்புகளைக் கொண்டு சகமனிதன் மீதான அவமதிப்புகளைப் புரிந்துகொள்வதே இயல்பானது என்று எனக்கும் படுகிறது.
நாம் அனைவருமே ஏதேனும் அவமதிப்புகள் வழியாகவே கடந்து வந்திருப்போம். ‘நீ பிறன்’ என எவரையேனும் சொல்லும்போது நாம் அந்த அவமதிப்புகளை எண்ணிக்கொண்டாலே போதும்
ஜெ

No comments:

Post a Comment