Sunday, August 31, 2014

கார்த்திக்,ராமானுஜம்,சந்தோஷ்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,
நலம் தானே?
சோற்றுக்கணக்கு கதை படித்ததும் எனக்குள் எழுந்த முகம் “கறிசாப்பாடு” பாய் என்கிற பெரியவருடையது. பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் சென்னைக்கு எடுத்து வந்தது ஏழ்மையை மட்டுமே. விளம்பர பலகைகள் வரைந்து கிடைக்கும் காசில் தான் படித்தேன். கையில் கிடைக்கும் பத்திருபது ரூபாயில் தெருக்கடைகளில் தான் பெரும்பாலும் சாப்பாடு. அதிலும் மட்டமான ஆரோக்கியமில்லாத உணவு. அப்போது மிக ஒல்லியாக இருப்பேன். கறி சாப்பாட்டிற்கு நாவு ஆசைப்படும் காலம்.
ஓவியக்கல்லூரிக்கு எதிரிலிருக்கும் ஒரு தெருவில் தான் பாயின் சாப்பாட்டுக்கடையை கண்டுபிடித்தேன். பெரும்பாலும் ரிக்சாகாரர்களும், கூலி வேலையாட்களும் சாப்பிடும் கடை. ஆறு ரூபாய்க்கு கறி சாப்பாடு. கடைசியில் ரசமும் ஊற்றுவார். நான் கல்லூரி மாணவன் என்பதை அறிந்ததும் ஏக சந்தோஷத்துடன் எனக்குப் பறிமாறினார். பிறகு ஒரு கூட்டம் நண்பர்களுடன் அவர் கடைக்குச் செல்ல ஆரம்பித்தோம். “விலைவாசி வெளியில எப்டியிருக்குன்னு பாய்க்கு தெரியாது போலிருக்கிறது” என்று நண்பர்கள் சில சமயம் தங்களுக்குள் கிண்டல் பண்ணுவார்கள்.
கல்லூரி முடித்த நாலு வருடங்களும் அவர் கடையில் தான் பெரும்பாலும் மதிய சாப்பாடு. பிறகு வேலை கிடைத்து நானும் எக்மோர் பக்கம் போகாமலிருந்தேன். எட்டு வருடங்களுக்கு பிறகு நண்பர்கள் கல்லூரியில் சந்தித்த போது பாய் கடைக்கு போகலாம் என்று நினைத்துப் போன போது கடை அங்கு இல்லை. விசாரித்ததில் பாய்க்கு கண்களில் ஏதோ பிரச்சனை என்று குடும்பத்துடன் தன் சொந்த ஊரான கேரளாவிற்கே போய்விட்டதாக சொன்னார்கள்.
அந்த பாயின் கையும் கெத்தேல் சாகிபினுடையது தான். வேற்றூருக்கு பிழைக்க போன எல்லாருடைய அன்னத்தட்டை நோக்கியும் இப்படி ஒரு கை காருண்யத்துடன் நீண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் தான் இத்தனை கண்னீர், இத்தனை விசும்பல்களை உருவாக்க முடிந்திருக்கிற‌து உங்களுடைய இந்தச் சிறுகதை.
அன்புடன்
சந்தோஷ்
http://ensanthosh.wordpress.com/
அன்புள்ள சந்தோஷ்
கேரள எழுத்தாளர்களின் சுயசரிதைகள் அனைத்திலும் அப்படி ஒரு கோழிக்கோடு மாப்பிளா முஸ்லீம் சோறு போட்ட சித்திரம் இருக்கும். பல படங்களில் அத்தகைய கதைமாந்தர் வந்திருக்கிறார்கள். பாலன் கே நாயர் இரு படங்களில் அத்தகைய கதாபாத்திரங்களை அற்புதமாக நடித்திருக்கிறார்
அது ஒரு பண்பாடு. ஒரு யுகத்தின் எச்சம். ஆனால் அந்த அடிபப்டைக் கனிவு ஏதோ வடிவில் எங்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ
வணங்கான் படித்தேன்.ஒரு சமூக அவலத்தை எப்படி எதிர்கொண்டு வெளி வருவது என்ற காந்தியக் கோட்பாட்டின் உதாரணமாக் விளங்குகிறது.
”அநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்து கொண்டவர்கள்.உங்கள் குலத்தில் மிகப் பெரும்பாலானவர்கள் அந்த வாழ்வுக்குப் பதிலாக மரணத்தைத் தேர்வு செய்திருந்தால் ஒன்று உங்கள் குலம் அழிந்திருக்கும்,இல்லை வென்றிருக்கும்”- பின் தொடரும் நிழலின் குரலில் பாபு (காந்தி)வின் குரலாக ஒலித்த உங்கள் மகத்தான வரிகள் நினைவில் எதிரொலிக்கின்றன.
திடீரென்று டெண்டுல்கர் ஃபார்முக்கு வந்து சாத்து சாத்து என்று சாத்துவது போல் ஒரு உக்கிர உத்வேகத்துடன் எழுதிக் குவிக்கிறீர்கள்.Creative mania என்று சொல்லும் அளவுக்கு எழுச்சியான நிலையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.பல சமயங்களில் மன எழுச்சி நெறிமுறைப் படுத்தப் படாமல் ஆற்றல் வீணாவதோடு மன அழுத்தத்தையும் ,மன நோய்களையும் உருவாக்குவதை அன்றாடம் பார்க்கிறேன்.ஆனால் தங்களிடம் நெறிமுறைப் படுத்திய எழுச்சியே (channelized psychic energy) உன்னதக் கலையாக உருவெடுக்கிறது
வாழ்த்துக்கள்
அன்புடன்
ராமானுஜம்
அன்புள்ள ராமானுஜம்
கருத்துக்கள் பருப்பொருட்களை இயக்கும் விசை கொண்டவை. அவை உருவாவதற்குத்தான் வரலாறு கனியவேண்டும். முன்னோடிமனங்கள் உருவாக வேண்டும். கருத்துக்கள் உருவானால் அவை என்றோ நடைமுறைக்கு வந்தே தீரும்
ஜெ
ஜெயமோகன் அவர்களுக்கு,
வணங்கான் நாடாரின் சொந்தமாய் கொங்கு நாட்டில் பிறந்த நாடார் நான். மதப்பற்றை விட சாதி பற்று எனக்குச் சற்று அதிகம்.
உங்கள் கதையைப் படித்தபோது மீண்டும் பெருமை கொண்டேன்.அடிமைப் பட்டுக்கிடந்த சமுகம், ஆளுமை சமூகமாய்,வழிநடத்தும் சமுகமாய் எப்படி மாறியது என்பதை பதிவு செய்து உள்ளது பாராட்டுக்குரியது.
வணங்கான் கதையைப் படித்தபோது இன்று இந்த தமிழ் சமுகம் எவ்வளவு மாறிவிட்டது என்று பலருக்கு ஆச்சிரியமாக இருக்கும். ஆனால் இன்னும் நாம் சாதியை விட்டுவிடவில்லை.
உங்கள் அலுவலகத்தில்,பக்கத்துக்கு வீடுகளில்,பொது இடங்களில் சந்திக்கும் நபர்கள் நாம் சாதியா என்று கேட்டு தெரிந்துகொள்ள தயங்குவதில்லை. அவர்கள் நம் சாதியாக இருந்துவிட்டால் கொஞ்சம் அதிகம் நெருக்கம் கொள்வோம். இது படித்தவர் மத்தியில் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
இப்பொழுதும் எத்தனை படித்த நாகரிக குடும்பங்கள் சாதி மாறி திருமணம் செய்கிறார்கள்?. காதல் தோல்வி அடைவது இல்லை, சாதியால் தோற்கடிக்கப்படுகிறது.
எனக்கு இப்படி இழப்புகளால் தான் சாதியை இப்போது விட்டுகொடுக்க மனம் இல்லை.
இந்த அரசு, சமுகம் என்று சாதி என்ற சொல்லை நீக்குமோ தெரியாது.
நீக்கவும் முடியாது.
அதனால் நான் என் வாரிசுகளுக்கு பெயரின் பின் நாடாரை இணைப்பதாக முடிவெடுத்துவிட்டேன்.
இந்த கதை எல்லா சாதியினரும் விரும்பிப்படிக்கலாம்.. மனதில் தன் சாதி வந்துபோகாமல் இருந்தால்!
நன்றியுடன்..
சி.கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்
இலக்கியம் என்பது எப்போதுமே தனியனுபவங்களை பொது அனுபவங்களாக ஆக்குவது. தனியனுபவம் என்ற முறையில் மிக அந்தரங்கமாக அது ஆகவேண்டும். அதற்காகவே சாதி, இட, மொழி, பண்பாடு, தனிவாழ்வு சார்ந்த தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. அவை இல்லாமல் பொதுத்தகவல்களை வைத்து இலக்கியம் எழுதமுடியாது
ஆனால் இலக்கியத்தின் நோக்கமும், இறுதியும் அந்த தனியனுபவம் சார்ந்த தகவல்கள் அல்ல. அந்த தனியனுபவத்தை வாசிக்கும் அனைவரும் தங்கள் அனுபவமாக ஆக்கிக்கொள்ளச் செய்ய வேண்டும் அது. அவ்வாறு அது அவ்வனுபவத்தை பொது அனுபவமாக ஆக்க வேண்டும். அதில் அனைவரும் பங்குகொள்ள முடியும். உலகமெங்கும் செல்லமுடியும்
எஸ்கிமோக்களின் வாழ்க்கையை யூரி பலாயன் எழுதினால் அந்த சாதிகள், உபசாதிகள், குலக்குழுக்கள், சடங்குகள் நம்பிக்கைகளுடன் மட்டுமே எழுதுகிறார். அந்த தனியடையாளங்களே அக்கதைகளை நம்பகத்தன்மை கொண்டவை ஆக்குகின்றன. வெறும் கருத்து மாதிரிகளாக அல்லாமல் அவர்களை மானுடர்களாக ஆக்குகின்றன.
ஆனால் அவற்றுக்கு நாகர்கோயிலில் வாழும் எனக்கு எந்த சமூகவியல் முக்கியத்துவமும் கிடையாது. நான் பெறுவது அதிலிருந்து ஒரு மானுட அனுபவத்தை மட்டுமே. இபப்டித்தான் இலக்கியம் செயல்படுகிறது.
இலக்கியத்தின் இந்த மலர்வை அறியாத அரசியல்குறுகல் கொண்டவர்களே அதன் தனியனுபவச்சித்திரங்களை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜெ

No comments:

Post a Comment