Sunday, August 31, 2014

சோற்றுக்கணக்கு கேசவமணிமனிதன் எதற்கு வேண்டுமானாலும் கணக்குப் பார்க்கலாம். ஆனால் சோற்றுக்கு கணக்குப் பார்க்கலாமா? உண்மையில் உற்றார் உறவினர் என்பவர்கள் கணக்குப் பார்க்கத்தானே செய்கிறார்கள்? அப்படியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு உணவு விடுதி நடத்துபவர் அப்படி இருக்கமுடியுமா? முடியும் என்பதை ஜெயமோகனின் இந்தக் கதை சொல்கிறது. ஜெயமோகனின் அறம் சிறுகதைகளில் சோற்றுக் கணக்கு ஆகச்சிறந்த கதையாகும். இந்தக் கதை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் நுட்பங்கள் அநேகம். இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானது. கதையைப் படித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும் பரவசம், நம் மூளையில் ஏற்படும் பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று.

பசி எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறியாதவர்கள் அல்ல. மனிதனுக்கு அவனுடைய வாழ்வில் எத்தனையோ இல்லாமை இருக்கலாம் ஆனால் உணவு இல்லாமையைப் போலக் கொடியது வேறு ஒன்றுமில்லை. சங்க காலக் காப்பியமான மணிமேகலை உணவையும் பசியையும் பற்றிப் பேசுகிறது. அட்சயபாத்திரம் பெற்ற மணிமேகலையிடம் தீவதிலகை என்ற பெண் இவ்வாறு சொல்கிறாள்:

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி. அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம். ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு! என்று சொல்வதாக இப்பாடலை பாடியிருக்கிறார் சீத்தலைச் சாத்தனார்.

உணவு என்பது உயிர்தான்! எனவே அதைக் கொடுப்பவர் யாராக இருப்பினும் அவர்கள் கடவுளுக்கு நிகராகப் போற்றத் தகுந்தவர். பலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையின்றி எல்லோருக்கும் உணவு தரும் கெத்தேல் சாகிப் அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையின் மறு அவதாரம்தான். அவரைப் பற்றிய உருவம் நம் கண்முன் விரியும் தருணத்தில், கண்ணதாசனின், ”கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்என்ற வரிகள் மனதில் தன்னியல்பாக ஓடுகிறது. அவர் ஓர் அன்னதாதா; உண்மையான ஆன்மீகவாதி. இந்த உலகில் எத்தனையோ அவதார புருஷர்கள் தோன்றியிருக்கலாம் அவர்களுக்கு எல்லாம் சற்றும் இளைத்தவரல்ல கெத்தேல் சாகிப்.

கெத்தேல் சாகிப்பை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ள ஜெயமோகன் காட்டும் மூன்று காட்சிகளின் சித்தரிப்பும், அந்தச் சித்தரிப்பிலிருந்து எழும் அவரது மூன்று பரிமாணங்களையும் நாம் உணரவேண்டியது அவசியம்.

முதல் காட்சி:
மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.

இரண்டாம் காட்சி:
அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாகசாப்பிடுடாஎன்பாள் அம்மா.

மூன்றாம் காட்சி:
என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னுஎன்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப்நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன் பிள்ளேச்சாஎன்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி! கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.

உறவும் சரி, பெற்ற தாயும் சரி சோற்றுக்குக் கணக்குப் பார்க்கும்போது கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்பு வார்த்தைகளால் அளவிட முடியாதது. அவர் உணவு விடுதி நடத்துகிறார். எல்லோருக்கும் இலவசமாக உணவு கொடுக்கிறார். பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் வெறுமே சாப்பிட்டுப் போகலாம் என்பது ஒரு பக்கமிருப்பினும், அதைச் செய்யும் விதத்தில் அன்பு, இரக்கம், பாசம் இருப்பது அவசியம். இல்லையேல் அந்தச் செயலால் ஒரு பயனும் இல்லை. இலவசம் என்பதற்காகச் சாப்பிடுபவன் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்ற அவரின் உயர்ந்த பண்பு இதனால் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த உணவின் ருசி, இது வெறும் கடனுக்காகச் செய்யும் காரியமல்ல கடமைக்காகச் செய்யும் காரியம் என்பதையும் நமக்குக் காட்டுகிறது. இங்கேதான் கெத்தேல் சாகிப் வானளவு உயர்ந்து நிற்கிறார். இது அவரது முதல் பரிமாணம்.

தான் பல வருடங்களாக சாப்பிட்டதற்கு ஒட்டுமொத்தமாக பணத்தை உண்டியலில் போடுகிறான் கதைசொல்லி. ஒரு பக்தன் கடவுளின் சன்னிதியில் உண்டியலில் காணிக்கையிடும் காட்சிக்கு நிகரானது இது. கடவுளுக்கு நாம் ஏதேனும் உபகாரம் செய்யமுடியமா? இருந்தும் நம் சிற்றறிவு அதில் சற்றே திருப்பதி அடைகிறது. அவரது சோற்றுக் கணக்கை எத்தனை எத்தனை பணம் கொட்டிக் கொடுத்தாலும் தீர்க்கத்தான் முடியுமா? ஏழேழு ஜன்மத்திற்கும் தீர்க்க இயலாத ஒரு கடன் அல்லவா? கெத்தேல் சாகிப் அவனைப் பார்த்து சற்றே தலையசைத்து ஒரு பார்வை பார்த்து விடமாட்டாரா என்ற ஏக்கம் அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படுகிறது. ஆனால் அப்படி பார்த்துவிட்டால் அவர் செய்த காரியத்தின் மகத்துவம் நமக்கு விளங்காமலே போய்விடும். மாறாக நம் அகங்காரம், “பார்த்தாயா இதுவரை சாப்பிட்டதற்கு மொத்தமாக கணக்குத் தீர்த்துவிட்டேன்என்று கொக்கரிக்கும். இத்தகைய காரியத்தைச் செய்வதும், அதை அன்புடன் செய்வதும் மட்டும் போதுமானது அல்ல. மாறாக அதற்கான பலனின் மீதும் பற்று வைக்காமல் இருப்பது போற்றுதற்குரியது. இந்த இடத்தில், கீதை காட்டும் கிருஷ்ணனின் தரிசனம் போன்று, கெத்தேல் சாகிப்பின் விஸ்வரூப தரிசனம் வெளிப்படுகிறது. நாம் அவரைக் கண்டு பரவசமடைந்து பேச்சடைத்து நிற்கிறோம். இது அவரது இரண்டாவது பரிமாணம்.

அவர் வெறும் உணவை மட்டும் தன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவில்லை மாறாக உணவுடன் சேர்த்து அற உணர்வையும் பரிமாறுகிறார். இந்த அறம், நேர்மை, அன்பு, இரக்கம் என்பது எப்போதும் ஒரு தரப்பை மட்டும் சார்ந்ததல்ல. இரண்டு தரப்பையும் சார்ந்தது. எனவே ஒரு தரப்பு மட்டும் தீவிரத்துடனும், தீரத்துடனும் இவற்றை நடைமுறைப் படுத்தும்போது அடுத்த தரப்பினரும் அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சையின் அடிப்படைத் தத்துவம். ஆகவே கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்பு கதைசொல்லியிடம் இயல்பாகப் படிந்து விடுகிறது. கிடைத்த பணத்தை தன் அத்தையிடம் கொடுத்து அவள் கணக்கைத் தீர்க்கப்போகிறான் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் அவளது மகளைத் திருமணம் செய்வதன் மூலம் அந்தக் கணக்கைத் தீர்க்கிறான். தன்னைப் புறக்கணித்து அவமானப்படுத்திய அத்தையின் மகளைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை. இருந்தும் அப்படி ஏன் செய்கிறான் என்றால் அதற்குக் காரணம் கெத்தேல் சாகிப்புதான். அந்த உணர்வை அவனுக்குக் கொடுத்தது அவர்தான். இங்கே அவரது மூன்றாவது பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

சுருங்கச் சொன்னால்,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கான பொருள் கெத்தேல் சாகிப்பின் வாழ்க்கைதான். உலகில் எங்கேயும் எப்போதும் இப்படியான மனிதர்கள் தோன்றியபடிதான் இருக்கிறார்கள். அவர்களின் இருப்பு பிறரையும் அவ்வாறாக மாறுவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. அதுவே மண் மீதான இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக இருக்கிறது. இவையெல்லாம் கெத்தேல் சாகிப்பை நம் உள்ளத்தில் என்றென்றுமாக நிலைத்து நிற்பவராகச் செய்து விடுகிறது. இத்தனையும் இந்தக் கதையில் வெளிப்படுவதன் மூலம் இது என்றென்றைக்குமாக பேசப்படும் ஒரு கதையாக ஆகியிருக்கிறது

சோற்றுக் கணக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கதை. எப்போது படித்தாலும் புதிது போல இந்தக் கதை என்னை வெகுவாக அலைக்கழிக்கிறது. படித்துப் படித்துத் தீராத கதை இது.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_30.html#sthash.GN5kwMUx.dpuf

1 comment: