Sunday, August 31, 2014

விஜயகிருஷ்ணன், கோவைதங்கவேல், தினேஷ் நல்லசிவம்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு ,
மத்துறு தயிர் சிறுகதையை வாசித்தேன். சார், குரு-சீடன் உறவின் அதி அற்புத நிகழ்வுகளைத் தன்னுள் பொதிந்து நகரும் சிறுகதை. .. கம்பராமாயணத்தை தேவசகாயம் நாடாரு சொல்லி அறிமுகமானது. அந்த நிலையிலிருந்து தற்போது பேராசிரியர் மூலம்; வியக்கும் படியான வாசகர்கள் இருவரும் ;
பேராசிரியர் ஐ ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் மூலமாக உங்களின் நினைவுகளே புனைவுகளாக மாறுகிறது என்று தொகுத்து கொண்டேன்.  மேலும் ராஜம் சொல்லவே வேணாம் ராஜமார்தண்டனையே என்று நினைக்கும் படியாக
.ஒரு ஆசிரியன் வாழ்கையின் இந்த அளவுக்கு உள்ளுணர்வில் கண்ணிருடன் நினைக்கும் தோறும் ஊடுருவமுடியுமா எனும் படியான ஆளுமையாகக் குமாரபிள்ளை.பேராசிரியர் தான்; அவரின் அடுத்த தலைமுறைக்கு, ஒரு உன்னதமான உயிர் சங்கிலி; ஏக்கம் தான் வருகிறது நல்லாசிரியன் கிடைப்பது பிறவியின் புண்ணியம்; ராஜம், குமார் அது வாய்க்க பெற்றவர்கள்,
ராஜத்தின் அந்த செயலைச் சொல்ல தெரியல. ஆனால் ஜெயமோகன் சாருக்கு பதிலாக நான் அங்கே இருந்தால் அவரை எப்படியாவது தூக்கியாவது பேராசிரியரின் முன் கொண்டு வந்திருப்பேன் அந்த கனிந்த மனிதனின் விருப்பம் தானே முக்கியம்
Regards
dineshnallasivam
என் பிரியத்துக்குரிய எழுத்தாளருக்கு,
உங்களின் ஏழாம் உலகம் நாவலைப் படித்த பிறகு அதன் பாதிப்பிலிருந்து விடுபட கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்டது. அன்றிலிருந்து உங்கள் படைப்புகளை படிக்க எனக்குள் தைரியம் வந்ததே இல்லை. சோற்றுக்கணக்கு சிறுகதையை படிக்க வேண்டுமென்ற ஆவல் மனிதனுக்கு இயற்கையிலேயே உண்டான சோற்றின் மீதான பிடிப்பின் காரணமாய் ஏற்பட்டது. இன்றைக்கு படித்தே விட்டேன்.
சாகிப் போன்ற ஒருத்தர் எனது வாழ் நாளில் வந்து சென்றிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் என்ற ஊரில் மேல் வகுப்பு படிக்கையில் ஒன்னே கால் ரூபாய்க்கு மதியச் சாப்பாடு போட்ட செட்டியார் எனக்குள் வந்து சென்றார். அழுக்கு நிறைந்த வேட்டியுடன், மேல் சட்டை ஏதுமின்றி வாங்கோ என்று வரவேற்பார். பெஞ்சில் அமர்ந்த நொடியில் இலையொன்றினை நீவி கொண்டு வந்து வைத்து, அதன் மீது தண்ணீர் தெளித்து விட்டு சாதம் வைப்பார். மனசு கூசி கொஞ்சமாய் சாப்பிடுவேன். ஒன்னேகால் ரூபாய்க்கு சாப்பாடு கிட்டுமா என்ற ஐயம் எனக்கு அவரிடம் மூன்று மாதம் சாப்பிடும் வரை வந்து கொண்டேதான் இருக்கும். பக்கத்து இலையில் வறுத்த மீன் சிவப்பாய், மணத்துடன் கிடக்கும். நாவில் ஊறும் எச்சியை பாக்கெட் கட்டுப்படுத்தும் நாட்கள் எனக்குள் நிழலாடி மறைகின்றன.
சோற்றுக்கணக்கு தான் வாழ்க்கையின் மீதான பிடிப்பிற்கு காரணம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றீர்கள். இல்லையென்றால் ராமலட்சுமிக்கு கல்யாணமே ஆகாதே? தாய், தகப்பனுக்கும் சோற்றுக்கடன் ஆற்றித் தீரத்தானே வாழ்க்கை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.அதே சோற்றுக்கடனை நமது பிள்ளைகளும் நமக்குத் தீர்ப்பரே.
உங்களின் ஒவ்வொரு படைப்பும் உள்ளத்தைக் கீறி விடுகிற ரகமாய் இருப்பதாலே, கொஞ்சம் பயமாய் இருக்கிறது உங்கள் படைப்புகளை படிக்க. ஆனாலும் மீந்து சென்ற இனிப்புச் சுவை போல மீண்டும் மீண்டும் உங்கள் பக்கமாய் மனது இழுக்கிறது.
தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பிரியங்களுடன்
கோவை தங்கவேல்
அன்புள்ள தங்கவேல் அவர்களுக்கு,
நன்றி
இந்தக்கதைகள் அனைத்துமே பலவருடங்களாக மனதுள் இருந்தவை. சிலகதைகள் 25 வருடங்களாக. இன்று ஒரு மனநிலையில் இக்கதைகள் அனைத்தின் வழியாகவும் நானே ஒன்றைத் தேடுகிறேன். மானுடஅறம் என நான் நம்பும் ஒன்றைத்தான். அந்த நம்பிக்கையே மிஞ்சிய வாழ்க்கையை முன்னகர்ந்த்தும் என்பதுபோல. ஒரு புணைபோல
அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை
ஜெ
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
அறம் மற்றும் தாயார்பாதம் பெண்களை ஆண்களின் பார்வையில் காட்டுகிறது. கதையிலும் ஆண்களே தங்கள் பார்வையாக வைகிறார்கள். தான் பெண்ணைத் தெய்வமாக பார்க்கிறேன் என்று எப்போதும் எண்ணுகிறான் ஒரு ஆண். பெண்ணை அறத்தொடு கூடிய வீரத்தோடும் பொறுமையான அன்போடும் மட்டுமே முக்கால்வாசிபேர் பார்கிறார்கள். அதைத்தான் பத்தினி என்றும் தாய்மை என்றும் நாம் characterization செய்கிறோம். இதில் ஆண்களின் dichotomous perception இருக்கிறது. ஏனெனில் அப்படி பார்க்கும் ஆண் தன் மனைவியை அதே உணர்வுடன் நடத்துவதில்லை. இதில் உயரிய குணம்படைத்த ஆண்களும் அப்படித்தான். உங்கள் பெண் வாசகர்களின் உணர்ச்சிகரமான கடிதங்களில் பல வீட்டின் நிலவரமும் அப்படியே இருக்கிறது போலும்.
தாயார்பாதம் கதையில் வருகிற அப்பா போல். இசையில் தேர்ச்சி பெற்றவரானதால் சமுதாயம் மதிக்கத்தக்க ஒருவர் ஏன் ஒரு பெண்ணை புரிந்துக்கொள்ளமுடியவில்லை? அவரே வேறு ஒருவர் வந்து கணவன் மனைவி உறவைப்பற்றி அறிவுரை கேட்டிருந்தால் பதில் அழகாக சொல்லியிருப்பார்.
ராமாயணத்தில் கூட ராமன் தெய்வமாக காட்டமடுவதால் சீதையின் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் பெரிதாக காட்டப்படுவதில்லை. அதை தாங்கி கொள்வது பெண்ணின் உயர்ந்த பண்பாக காட்டபடுகிறது. அதனால் தான் சீதையை இலட்சிய பெண்ணாக நம் நாட்டில் சொல்லபடுகிறது. அதுவும் ஆண்களால்.
ஒரு உண்மையை ஆணாக நானும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒரு பெண்மணி தன் கடிதத்தில் கூறியிருந்தார் ‘ஆனால் பெண்ணின் பொறுமை இல்லாவிட்டால் மக்கள் இல்லை என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது’ என்று. இன்று குடும்பங்கள் இந்திய மண்ணில் நிலைத்திருக்க முக்கிய காரணம் பெண்களே அவர்களின் பொறுமையும் தான். ஏனனில் நானும் என் வாழ்விலும் பெண்களிடத்தில் ஆண்களின் வக்கிரத்தை பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த ஆண்கள் சமுதாயத்தில் நல்ல அறிவுரை கூறுகிறவர்களாக உள்ளனர்.
ஆனால் பெண்களும் இந்த ஆண்களின் சுயநலத்தால் ஏற்படுத்திய கூற்றுக்களை ஏற்கிறார்களா? ஒரு பெண்ணுக்கு திருமணத்தின் போது புதிய ஆண் உறவான கணவனின் மீது உடனே ஏற்படும் பந்தமும் இந்த சமுதாய வளர்ச்சியின் காரணத்தினால்தானா? ஒரு ஆணிடம் ஏற்படும் சம்பந்தத்தினால் ஒரு பெண் தன் வாழ்கையின் முழுமையை உணர்கிறாளா?
அந்த காலத்தில் குடும்பங்கள் எப்படி இயங்கியிருக்கும் என நினைக்கக்கூட முடியவில்லை. இன்றாவது வீட்டு பெண்களுக்கு வீட்டு வேலைக்கான இயந்திரங்களும் கவனத்தை ஈர்க்க ஊடகங்களும் இருக்கின்றன. அன்று வீட்டில் பிரச்சனை என்றால் தொலைபேசி கிடையாது கடிதம் எழுதத் தெரியாது என்ன செய்திருப்பார்கள். நீங்கள் எழுதியதுப்போல் அசுரத்தனமாக வேலை செய்யத்தான் முடியும். அவர்களின் உள்ள குமுறல்களை நினைத்தாலே உடம்பு சிலிர்கிறது.
இன்று இளைஞர்களாக இருக்கும் முக்கியமாக நகர்புற பெண்களிடத்தில் இந்த எண்ணம் தளர்ந்திருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் ஆண்கள் அவ்வுளவாக மாறவில்லை.
அன்புடன்
வே. விஜயகிருஷ்ணன்
அன்புள்ள விஜயகிருஷ்ணன்
மதிப்பீடுகளின் வரிசை காலத்துக்கு ஏற்ப மாறும், மாறாமல் இருக்கமுடியாது. ஆனால் தாய்மை போன்றவை உயிரியல் பண்புகள். தன் தங்கிவாழ்தலுக்காக ஒவ்வொரு உயிரும் ஒவ்வொருவகையில் உருவாக்கிக் கொள்பவை. அவை முழுமையான மாற்றத்துக்குள்ளாகும் என நான் நினைக்கவில்லை. அவை வெறும் சமூகப்பயிற்சிகள் என தொண்ணூறுகள் வரைக்கும்கூட சில பெண்ணியர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு மானுட நடத்தைகள் உயிரியல் பண்புகளே என்று இன்று சொல்லப்படுகிறது. பெண்ணுக்கு நாம் சொல்லிவந்த பல இயல்புகள் மாறும், தாய்மை அப்படியேதான் இருக்கும் என்றே நினைக்கிறேன்
ஜெ

No comments:

Post a Comment