அன்பு ஜெயமோகனுக்கு,
‘வணங்கான்‘ நாஞ்சில் நாட்டில் நிலவிவந்த சமூகக்கொடுமையை மையப்படுத்திச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நல்லகதை. நாஞ்சில் தமிழிலும், சில இடங்களில் நெல்லைத்தமிழிலும் மிக லாகவமாக கையாண்டிருக்கிறீர்கள்.
ஒரு முக்கிய குறிப்பை, சரித்திரம் தெற்றிவிடக் கூடாது என்பதற்காக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மார்ஷல் நேசமணி தலைமை தாங்கி நடத்திய கட்சி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். இது அன்றைய தமிழ்நாடு காங்கிரஸின் அங்கமல்ல. நேசமணியின் முழு அரசியல் வாழ்க்கை, அவரது வலது கரமும் அவர் இறக்கும் வரையிலும் அவரோடு இணைந்து பல போராட்டங்களைச் சந்தித்த திரு.ஏ.ஏ.ரசாக் எழுதிய ‘நேசமணி – ஒரு சரித்திரத் திருப்பம்’ (தமிழாலயம் பதிப்பகம், சுவாமித்தோப்பு)புத்தகத்தில் கொட்டிக்கிடக்கிறது. அதில் வரும் பல சம்பவங்களின் அடிப்படையில் நல்ல பல கதைகளை உங்களால் உருவாக்க முடியும். சாந்த குணமுடைய நேசமணித் தாத்தாவை (அவரை நான் அப்படித்தான் அழைத்து வந்திருக்கிறேன்) ஒரு அடியாள் கூட்டத்தின் தலைவனைப்போல் சித்தரித்திருப்பதை மட்டும் என்னால் உள்வாங்க முடியவில்லை. மார்ஷல் நேசமணி விளவங்கோடு தாலுகாவிலுள்ள பள்ளியாடி கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயி வெள்ளையன் நாடாரின் மகனாகத்தான் பிறந்தார். இவர் ஏழை தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஜாதி இந்துக்களால் தொடரப்பட்ட பொய் வழக்குகளை எடுத்து அவர்களுக்காக வாதடினார் என்பதே உண்மை.1950-ல் இந்திய அரசின் கீழ் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம் வந்தது. அங்கு சமஸ்தான காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசின் அங்கமாக இருந்தது. அந்த சமஸ்தான காங்கிரசுக்கும் நமது திருவாங்கூர்-தமிழ்நாடு காங்கிரசுக்கும் (Travancore Tamil Nadu Congress) எந்தவொரு தொடர்புமில்லை. ஏறக்குறைய சமஸ்தான காங்கிரசின் எதிர்கட்சியாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.
திருவாங்கூர்-தமிழ்நாடு கங்கிரஸ் தனித்தே இயங்கி வந்தது. இதன் முக்கிய குறிக்கோள் சமஸ்தானத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் வாழும் (குமரி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய) பிரதேசங்களை சென்னை ராஜதானியோடு இணைக்க வேண்டும் என்பதே.ஒரு காலகட்டத்தில் 1951-ல் சென்னை காங்கிரசின் முயற்சியால் (அமரர் தாணுலிங்க நாடார் கூறியதுபோல – சம்ஸ்தான காங்கிரசுக்கு ஒத்துழைக்க வேண்டி முன்னாள் முதல்வரும் அப்போதைய அமைச்சருமான பக்தவச்சலம் மூலமாக) ’6 அம்ச பாளையங்கோட்டை சமரச திட்டம்’ தீட்டப்பட்டது. ஆனால் அத்திட்டம் 06-10-1950 அன்று இடலாக்குடியில் நடந்த TTNC பொதுக்கமிட்டி கூட்டத்தில் தோற்றுப்போனது. அந்த துயரத்தில் போட்டி TTNC, தாணுலிங்க நாடார் தலைமையில் பிரசவமானது. இது ‘கில்ட் காங்கிரஸ்’ என்று வர்ணிக்கப்பட்டது. பின்னர் 1952-ல் நடந்த நாடளுமன்ற தேர்தலில், மார்ஷல் நேசமணியை குடம் சின்னத்தில் எதிர்த்து தாணுலிங்க நாடார் வண்டி சின்னத்தில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது வரலாறு.
இளைய சமுதாயத்திற்கு தமிழ் இலக்கியத்தின்பால் மோகம் உட்டுவிக்கும் தங்களது தமிழ்ப் பணி வளரட்டும். நன்றி.
அன்புடன் அபு மர்வான்
அன்புள்ள அபு மர்வான்
என் தலைமுறைக்குச் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அக்கதை எழுதப்பட்டுள்ளது. நேசமணி அவர்களைச் சுற்றி வலுவான ஒரு தொண்டர்படை இருந்தது என்பதும் அதனால் அவர் பல வன்முறைகளை எதிர்த்து நிற்கமுடிந்தது என்பதும் நான் அறிந்தது.
ஜெ
No comments:
Post a Comment