Sunday, January 18, 2015

மயில்கழுத்து பற்றி கிரிதரன் ராஜகோபாலன்

மயில்கழுத்து கதையை முன்வைத்து

நண்பர் நட்பாஸும் நானும் சில சிறுகதைகள் பற்றி மடல் மூலம் பகிர்ந்துகொண்டோம். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு திரும்பியபோது அவர் பல அப்சர்வேஷன்களைப் பகிர்ந்து கொண்டார். நண்பர் நட்பாஸின் ஆர்வம் இலக்கியத்தைத் தாண்டி உளவியல், அறிவியல், உலக அரசியல் என எல்லையில்லாமல் நீளும். அவரது சம்மதத்துடன் சிறுகதைகள் பற்றியும் ஜெயமோகன் எழுதிய ’மயில்கழுத்து’ பற்றியும் ஓரிரு எண்ணங்கள்.

*
மயில்கழுத்தில் பாத்திரங்களின் குணாதிசயங்கள், பின் - முன் உட்கதைகள் வரிசையாக வருவதில்லை. ஒரு ப்ளாட்டிங் பேப்பரில் பல இடங்களில் தொடப்படும் மை மெல்ல ஊறி எல்லா இடங்களையும் இணைப்பது போல், கதை/உட்கதை ஆங்காங்கே விவரிக்கப்பட்டு நம்முன் ஒரு நிகழ்வாக விரிகிறது. ஒரே காலத்தில் நடக்கும் கதையானாலும், இக்கதைக்குள்ளும் ஃபிளாஷ் பேக் எல்லாம் இருப்பதால் முன் - பின் நகரும் படம் போல் கதை பல இடைவெளிகளை நிரப்பியபடி முடிவை நோக்கிப் போகிறது. ஒரேடியாக வரிசைக்கிரமமாகக் கதையைச் சொல்லாமல் இப்படிச் சொன்னவிதம் கதை ஓட்டத்தை தீர்மானிக்கிறது. இதுதான் இக்கதையில் எனக்குப் பிடித்த அம்சம்.

சிறுகதை முதல் வரிக்கு முன் ஆரம்பித்துவிடுகிறது எனச் சொல்வார்கள். அந்த மெளனத்துக்கும் முதல் பத்தியின் லயமும் தெளிவாக நம்பும்படி இருந்துவிட்டால் பாதி வெற்றியாம். இசை போல், மெளனத்துக்கும் முதல் ஸ்வரத்துக்கும் இடையே இருக்கும் சம்பந்தம். சிறுகதை இசைக்கப்படாத பியானோ போல். ஒரு அறைக்குள் இருக்கும்வரை மெளனம் மட்டும் இருக்கும். ஒரே ஒரு விசையை அழுத்திவிட்டால் போதும். அறையின் ஒலிவெளி மாறிடும். அதுபோல் நிகழ்வுகளின் வரிசையை மாற்றினாலும் கதை பொருள் தரலாம் - ஆனால் சிறுகதையின் லயம் மாறிவிடும். கதையின் சில வரிகளைப் படிக்கும்போது கதையின் போக்கே மாறிவிட்டது போல் தோன்றும். சிறு சலனம் போல் இருந்தாலும், நாம் கதையைப் புரிந்துகொண்ட விதத்தை மாற்றி போட்டுவிடும். எனக்கு அப்படிப்பட்ட வரிகள் மேல் மிகுந்த ஆசை உண்டு. அவ்வரியை முன்வைத்து மீண்டும் கதையைப் படித்தால் புது இடங்களுக்கு அது இட்டுச் செல்லும். இது ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா கதைகளில் வரும் கடைசி திருப்பம் இல்லை. கதையில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வரிகள் தனித்து நின்றால் அர்த்தம் அவ்வளவாக கிடைக்காது. ஆனால் கதையைப் படித்த பின் கதையின் திருப்பம் மற்றும் மையம் அவ்வரியில் குடிகொண்டிருப்பது போல் தோன்றும்.

ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை அவள் அம்மா  ‘என்னடி வாயில?’ எனக் கேட்பாள், ‘சூயிங்கம்’ என அப்பெண் பதிலளிப்பாள். கற்பழித்தவன் வாயில் இருக்கும் சூயிங்கம் அது. அதை கடைசி வரை அப்பெண் மென்றுகொண்டிருப்பாள். கதையில் சாதாரணமாக வரும் உரையாடலாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக கதையின் ஆதாரத்தையே நம்மை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட வரிகள் இரண்டு முறை படித்தால் மட்டுமே புலப்படும் என நினைக்கிறேன். முதல் முறை கதையை ஒட்டுமொத்தமாக அணுகிய பின், அவற்றின் சிறு பகுதிகளுக்குள் ஆழமாகச் சென்று கதையோடு அவை எப்படி பொருந்தி வருகிறது எனப் பார்ப்பது நல்ல அனுபவம். ஏனென்றால் சிறுகதையின் ஒவ்வொரு வரியிலும் கதை பற்றி ஏதேனும் விஷயம் இருக்கும் எனத் தோன்றுகிறது. அப்படி இருக்கும் கதைகள் வாசகனாக நம்மை ஈர்த்து மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டலாம். வண்ணநிலவனின் மிருகம். ஒரு முறை படித்தால் கதை என்ன சொல்ல வருகிறது என குழப்பம் வரலாம். யார் மிருகம் என விசாரணையில் இறங்கும்போது மீண்டும் கதையைப் படிக்கலாம்.

*


மயில்கழுத்தில் பிரதானமாக நான்கு பாத்திரங்கள். ராமன், பாலு, சுப்பு ஐயர், சந்திரா. உண்மை கதாபாத்திரங்களின் கதை என ஜெயமோகன் சொல்லியிருந்தாலும், உண்மை நபர்களின் சாயல் தெரியாமலும் கதையின் மையம் புரியும் என நினைக்கிறேன். சிறுகதை யாருடைய பார்வை கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு மூன்றாம் நபரின் பார்வை. அதிகப்பிரசங்கியாய் எல்லார் மனதிலும் புகுந்து வெளிப்படும் அநானிமஸ். ஆனால் பல முறை படித்த பின், கதையின் மையம் பாலு கதாபாத்திரம் வழியாகவே விரிகிறதாகத் தோன்றுகிறது. அதற்குப் பல காரணங்கள் - எல்லார் மனதையும் ஊடுருவிப் பார்த்து எடை போடுபவராக பாலுவின் பாத்திரப்படைப்பு வெளிப்படுகிறது. சுந்தர ராமசாமியின் குணாதிசயம் என்ற பின்புல ஞானம் இல்லாத வாசகருக்கும் பாலு பாத்திரம் தெளிவாக, அழுத்தமாகப் புரியும் என நினைக்கிறேன். மேலும், பாலுவின் எண்ணங்கள் மூலம் கதாபாத்திரங்கள் உட்சிக்கல் பல காட்சிகளாக நம்முன் விரிகிறது. குறிப்பாக சந்திரா தன்னிடம் அறிமுகமானது பற்றி ஒரே ஒரு வரியில் ராமன் குறிப்பிடும்போது (’கலாஷேத்ராவிலே மாயான்னு ஒரு பெல்ஜியம்பொண்ணு இருந்தா. அவ எங்க வீட்டுக்கு மேலேதான் குடியிருந்தா. அப்ப அவகூட போறச்ச இவளை அறிமுகம்’) பாலுவின் பார்வை பல கதைகளை சொல்லாமல் வெளிக்காட்டுகிறது.

இக்கதையில் பாத்திர அறிமுகங்கள் பற்றி சில வார்த்தைகள். ‘நீலமா?நீலம்னா சொல்றேள்?’ என ஆரம்பிக்கும்போது எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என நமக்குப் புரிவதில்லை. சில பத்திகளுக்குப் பின்னே அது வெளிப்படுகிறது - அதுவரை இக்கேள்விக்கான பதில், அதற்கான கேள்வி என உரையாடல் மூலம் இரு கதாபாத்திரங்களும் தெளிவாக நிலைபெற்றுவிடுகிறார்கள். அதே போல், முதல் பத்தியிலிருந்தே பாலு மற்றவரை எப்போதும் எடை போட்டுக்கொண்டே இருப்பவராக வெளிப்படுகிறார். யாரைப் பார்க்கிறோமோ அவரைப் பற்றிய அபிப்பிராயத்தை சீல் வைத்து மூடி ஜட்ஜ்மெண்ட் கொடுப்பவராக - தீர்க்கமான முடிவெடுப்பவராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார் (’காபி ஸ்டிராங்கா இல்லேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்குவேள்… மத்தபடி மனுஷனோட இருட்டைப்பத்தியும் தீமையப்பத்தியும் உங்களுக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது…’ , ‘கும்பகோணத்திலயும் பாபனாசத்திலேயும் உங்க கண்ணு முன்னாடி நடந்தாத்தான் உங்களுக்கு பிரச்சினை. இல்லாட்டி ஒண்ணுமில்லை இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டி இல்லே..’ என்று தஞ்சாவூர்த்தனமாக ராமன் இழுக்க ‘அதான்’ என்று பாலசுப்ரமணியன் அழுத்தினார். ராமன் மீண்டும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கைக்குட்டையை கைக்குள் வைத்து பிசைந்துகொண்டார்.’)

தொண்டைக்குள் சிக்கிய முள் போல் ராமன் எல்லாவற்றிலும் முனுக்கென தனக்குள் முடங்கும் மனதைக் கொண்டவர். தன்னைப் பற்றியோ, அடுத்தவர்கள் பற்றியோ தெளிவான முடிவுக்கு வராதவர். அல்லது அவற்றை முன் வைக்கத் தெரியாதவர். சந்தேகக் கண் கிடையாது. ஆனால் பாலு தன் குணாதிசயத்தை மூர்க்கமாக தீர்ப்பு சொல்லும்விதமாக முன்வைக்கும்போதெல்லாம் தனக்குள் சிந்தனை வயப்படுகிறார் (’நான் எழுதறேன்…தீமையே இல்லாம நல்லதை வச்சு நான் கிளாசிக்கு எழுதறேன்’ என்றார். பெரிய எடையை தூக்கி வைத்தவர் போல திணறி உள்ளங்கைக்குள் இருந்த கைக்குட்டையை விரித்து முகத்தை துடைத்துக்கொண்டார். முகத்தை அதில் ஒளித்துக்கொள்ள ஆசைப்படுபவர் போலிருந்தார்.)

கதையின் ஆரம்பத்தில் இருவரின் குணங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்ட பின் முடிவு வரை மாற்றமில்லை. உணர்வுகளை வெளிப்படையாக முன்வைக்கும் ராமனின் குணம் மாறுவதில்லை. ஆனால், உணர்வுகளுக்கு அறிவார்ந்த மேல்பூச்சு கலந்து வாதாடும் பாலுவுக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. சந்திரா வந்த பின் இது மேலும் தீவிரம் கொள்கிறது.

சந்திரா - திரைப்பட நாயகி போல் சாமிநாதன் பாடலுடன் அறிமுகமாகிறாள். ஒருவிதத்தில் இப்பாடல் கதையின் அடிநாதமாக விளங்குகிறது. ’கழுகுமலை முருகன்’.

– உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே – உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே

...மயக்
கம்செய்யுதே காமப் பித்தமே

இவ்வரிகள் முடியும்போது சந்திரா அறைக்குள் நுழைகிறாள்.  ‘தேடக் கிடையாத சொன்னமே’ எனும் வரியே காட்சியாக நடந்தது என அனானிமஸ் விவரிக்கிறார். சந்திரா வந்தவுடன் பாலு தன்னியல்பாக அவளை தன் மனத் தராசில் நிறுத்திப் பார்க்கிறார். அவள் கம்பீர செளந்தர்யத்தில் கலக்கம் அடைகிறார். இதை உணரும் சுப்பு ஐயர் ‘நானும் கவனிச்சிருக்கேன், சந்திராவ முதல்ல பாத்தப்ப பேஸ்தடிக்காத ஒருத்தனைக்கூடப் பாத்ததில்லை’ எனச் சொல்வதன மூலம் சந்திராவின் அழகின் வரலாறு நிலை நாட்டப்படுகிறது.

இக்காட்சியின் போது முக்கியமாக ஒன்று நடக்கிறது. அது வரை பாரபட்சமில்லாமல் எல்லாரையும் எடை போட்டு ‘இவன் இப்படித்தான்’ என ஸ்டாம்பு குத்தும் பாலு முதல் முறையாக தனக்குள் ஒரு உரையாடலை நடத்துகிறார். (’ஒருகணம் அவளுடைய முகமும் மறுகணம் தன்னுடைய தோற்றமும் அவர் மனதில் மாறி மாறி எழுந்தன. இன்னும் நல்ல சட்டை போட்டிருக்கலாமோ. தலையைச் சீவிக்கொண்டிருக்கலாமோ?’) இந்த இடத்தில் ஆசிரியர் பாலுவாக பேசி வெளிப்பட்டு விடுகிறார். இதே போன்ற  இடம் ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையில் நடக்கிறது (ஹ்ம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில்-) என கற்பழிக்கப்படுவதற்கு முன் அப்பெண் தனக்குள் பேசுவாள்.

மேலுள்ள ஒப்பீடு கதைக்கு முக்கியம். கதையின் ஆரம்பத்தில் நீலம்னா சொல்றேள் எனக் கேட்கிறார் பாலு. அதற்கு விளக்கம் பல பத்திகளுக்குப் பின் வருகிறது (’‘பொதுவா நீலம், ஊதால்லாம் மன இறுக்கம் உள்ளவங்களுக்கு புடிச்ச நெறம். மனுஷனோட தீமைய கவனிக்கிறவங்களுக்குண்டான நெறம்.’). இங்கே கதையில் நீலம் என்பது தீமைய கவனிக்கும் மக்களுக்குப் பிடித்த நிறம்.  மனிதன் தீமைக்காக மட்டுமே வாழ்பவன் என்பது பாலுவின் வாதம் (மனுஷனோட தீமைக்கு அளவே கெடையாது. அது மனுஷனை விட பலமடங்கு பெரிசு. வாழ்க்கைக்காக மனுஷன் தீமையப் பண்றதில்லை, தீமைக்காகத்தான் மனுஷன் வாழறான். ).  ஆனால் இத்தீமை வெளியே மற்றவனிடமிருந்து வரத்தேவையில்லை என்பது ராமனின் வாதம். நமக்குள்ளேயே தீமை சில குணாதிசயங்களாக மறைந்திருக்குன்னு ராமன் சொல்கிறார்( இருக்காங்க. ஆனா அவங்களும் வாழ்க்கையிலே மாட்டிண்டிருக்கிற சாதாரண மனுஷங்கதான்… பொறாமைப்படுறாங்க, பொருமறாங்க. முடிஞ்சவரைக்கும் மத்தவா கையிலே இருக்கிறத பிடுங்கிண்டுட முயற்சி பண்றாங்க… அதெல்லாம் பண்ணல்லேன்னா அப்றம் எப்டி மனுஷங்க?’).

தீமை வெளியே இருந்து வருவது என்பது பாலுவின் வாதம். மனிதனின் குணாதிசயத்தின் திருகலே தீமை என்பது ராமனின் வாதம். ஆனா, இன்னும் நல்ல சட்டை போட்டிருக்கலாம், தரித்திரம் பிடித்த தாவணியை போட்டிருக்ககூடாது என நினைக்கும்போதே தீமை மனதில் எழுந்துவிட்டதாக அர்த்தம் வருகிறது. தன் எல்லா உணர்வுகளுக்கும் தன்னால் விளக்கம் கொடுக்க முடியுமென இறுமாப்போடு இருக்கும் பாலுவுக்கு தனக்குள் நடக்கும் உரையாடல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட உரையாடலே திருகு மூளையின் தீமை என ராமன் சொல்லாமல் சொல்லிவிட்டார். நமக்குள் இருக்கும் so called தீமை வெளிப்பட வெளியாள் தேவையில்லை நம் மனம் மட்டும் போதும் என்பதை கதை சொல்ல வருவதாகத் தோன்றுகிறது.

சந்திரா வந்தவுடன் அந்த அறையின் பேலன்ஸ் ஆட்டம் போடுகிறது. சொல்ல முடியாத மெளனம் அங்கிருப்போரைச் சூழ்ந்து கொள்ள சுப்பு ஐயர் மட்டும் தன் வழக்கம் போல் பேசியபடி இருக்கிறார். அதுவரை ஐயருடன் சந்தோஷமாகப் பேசிய ராமன் சந்திரா வருகைக்குப் பின் தலை குனிந்து ஏதோ சிந்தனையில் இருக்கிறார். பாலு தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமலும், அறைக்குள் இருக்கும் மற்றவர்களுடன் சந்திராவுக்கு இருந்த உறவை எடை போட்டபடி இருக்கிறார்.

-

உரையாடல் சந்திரா- ஐயரின் தனிப்பட்ட அம்புகளாக அமைய அதுவரை நெளிந்து வந்த ராமன் கீழுள்ள ஒரு அறைக்கு தப்புகிறார். பாலுவும் அவரைப் பின் தொடர்கிறார். இருக்கமான அறையிலிருந்து விடுபட்டதும் பாலுவுக்கு தன்னியல்பு திரும்புகிறது. ராமன் பேசாமல் பெருமூச்சோடு நிற்பது தெரிந்தும், அவராக பேசட்டும் பேசாமல் அவரால் இருபது நிமிடம் கூட இருக்கமுடியாதே என நினைக்கிறார்.  உரையாடல் தொடரும்போது திரும்பவும் பாலு தன்னியல்பாக ராமனின் இசை பிரயோகத்தைப் பற்றி அவருக்கே விளக்குகிறார் (சிலபேர் இயற்கைய வர்ணிப்பா. சிலபேரு சமையலை வர்ணிப்பா. நீங்க இசைய சொல்றேள்…’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டீங்கறீங்களோ?’ என்றார் ராமன்). வழக்கம்போல் ராமன் அதைப் புரிந்துகொள்ள முயல்பவர் போல் கேட்டுக்கொள்கிறார். சந்திராவின் இருப்பிலிருந்து விலகியதும் இருவரும் சகஜ நிலைக்குத் திரும்புவது போல் உள்ளது.

’நீலப்பட்டுப்பொடவைய எடுத்து வச்சு ராத்திரி லைட்டு போட்டு பாத்துண்டே இருந்தேன். என்னன்னே தெரியலை, திடீர்னு ரொம்ப பயந்துட்டேன்’ - திரும்பவும் நீலம் எட்டிப்பார்க்கிறது. ஜெயமோகன் பல கதைகளில் அமானுஷத்தன்மையை விளக்க நீலத்தை உபயோகித்துள்ளார். குறிப்பாக கொற்றவை நாவலே நீல நிறத்திலிருந்து பிறந்ததாக கூறியுள்ளார் - கொற்றவையின் முதல் வரி ‘அறியமுடியாதவற்றின் நிறம் நீலம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்’. ஒரு எழுத்தாளனின் கதையில் இப்படி பல self references இருப்பது ஒரு வகையில் கதையின் ஆழத்தைக் கூட்டுகிறது.

அடுத்து வரும் பத்திகளில் ராமன் - சந்திரா உறவு விரிவடைகிறது. பாலு ராமனின் மெளனத்தை அவதானிக்கிறார் - ஆனால் பாலு திடீரென சந்திரா வேணாம், கச்ச்சேரி வேணாம்னு சொல்கிறார். ஏன்? இங்க கதையோட முடிச்சு கிடைக்கிறது - எதனால் சந்திரா மேல் எரிச்சல்? இல்லை அது அவர்மேல இருந்ததில்லை முழுமையான அழகை சந்திக்க முடியாமை, தன்னுள் ஏற்படுத்தும் மாற்றம், தாபம்னு சொல்கிறார் ராமன்.( ‘ராமன் எழுந்து சட்டையை கழற்றியபடி கவனமில்லாமல் கேட்பதுபோல ‘அவளும் உண்டோ?’ என்றார். ’) சந்திராவும் கச்சேரிக்கு வருவது தெரிந்ததும் தன்னால் கச்சேரியில் லயிக்க முடியாது என்ற எரிச்சல் மேலோங்குகிறது. அதனாலே கச்சேரி வேண்டாம் எனக் கிளம்பப் பார்க்கிறார்.

மணி ஐயருக்கு புரிந்த அழகியல் தனக்கு புரியலைன்னு ராமனுக்கு வருத்தம் என எனக்கு தோன்றியது. அதை பாலு புரிந்து கொண்டாரோ என்ற பதற்றம் - இத்தனைக்கும் ராமன் பெண்மை சாயல் கொண்டவர், பெண் அழகு பற்றி கதை எழுதுபவர் - செக்ஸ் பற்றி நுட்பமா எழுதுபவர் - அவராலேயே அந்த அழகை புரிந்துகொள்ள முடியலை - ஆராதிக்க வேண்டாம் - சொந்தம் கொள்ள ஆசை இல்லை - `புரியலை` அது தரும் வேதனை ராமனுக்கு உண்டாவதாக நான் புரிந்துகொண்டேன். சாமிநாதன் சொல்வதும் அப்படியே தோன்றுகிறது (இல்லண்ணா …தெரிஞ்சா இவர வரச்சொல்லியிருக்க மாட்டேன். ரொம்ப கஷ்டப்படுறார். ஆனால் நல்லா நாலஞ்சு அடிகிடைச்சு முறிஞ்சுபோனாக்கூட நல்லதுதான்). தாபம், காதல் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ராமனுக்கு அது கானல் நீர் எனத் தெரிகிறது - ஐயரின் இசை ஞானம் எல்லாருக்கும் முழுவதாய்ப் புரியாதது போல்.


மோகமுள் கதையில் பாபு, ராஜம் இருவரும் நண்பர்கள். ராஜம் - தெளிவான கருத்துகளுடன் அந்தந்த கணத்தில் வாழ்பவன். பாபு தணியாத இசை ஆர்வம் கொண்டவன். ஆனால் தாபம் அவன் மனதுள் கொந்தளிப்பை உருவாக்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்து மட்டுமல்லாமல் இசை  ஒருவனின் உள் இயல்புகளை காட்டும் கண்ணாடி என நம்புபவன். இசைக்கு, தன் அப்பாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக நினைக்கிறான். காதல் தாபத்தில் தவிப்பவன். இசை மூலம் காலத்தை பின்னுக்கு ஓட்டுபவன். அவனுக்கு இசை ஒரு மீடியம். உணர்வுகள் ஊற்றெடுக்கும் மீடியம்.

மயில்கழுத்து(2) கதையில் இந்த இருவரின் மனப்போக்கிலேயே பாலு, ராமன் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம். ராமன் எதற்கும் சட்டென உணர்ச்சி வசப்படுபவர். தன் ரத்தத்தில் இசை பெருக்கெடுத்து ஓடுவதாக நம்புபவர். ஜெயமோகனின் `தாயார் பாதம்` கதையிலும் இதே ராமன்  தன் இசை பாரம்பரியத்தைப் பற்றிப் பேசுவார். இசையில் இயங்க முடியாமல் எழுத்தில் கொஞ்சம் கொட்டுபவன் என எண்ணுகிறார். தன் எண்ணங்களைத் தெளிவான கருத்துகளாக முன்வைக்க முடியும் என திடமாக நம்புபவர் பாலு.

புள்ளிகளை இஷ்டம் போல் மனம் இணைக்கும்போது புதுப்புது வடிவங்கள் கிடைப்பது போல் நம் மனம் இசையின் ஏற்ற இறக்கங்களை இணைத்துப் புரிந்து கொள்வதாகத் தோன்றுகிறது. பாலுவின் எண்ண ஓட்டத்தில் அதை பார்க்கலாம் (அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும்முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?)

மோகமுள்ளில் ராஜம் ராகங்களுக்கு தனி அழகு கிடையாது, அது பாடுபவரை பொருத்தே அமையும் என விவாதிப்பார். பாபுவுக்கு ராக அமைப்பு தனி செளந்தர்யம். அதை மனதில் ஓட்டினாலே உன்மத்தமாக இருக்கும்.உணர்வுக்குவியலாக அந்த ராக ஓட்டங்களுடன் தன் எண்ணங்களை ஒட்ட வைத்துப் பேசும் சுபாவம் கொண்டவன் பாபு.இவ்விஷயத்தைப் பற்றி நிறைய விவாதிப்பார்கள்.

இதே ஒப்பீடு இக்கதையிலும் உண்டு. நடைமுறைவாதியான பாலுவுக்கு ஆலாபனை கூட புள்ளி வைத்து தெளிவான வடிவங்களாக அமையும் கோலமாகிறது. அதே ராமனுக்கு அது அழகு. கைக்குள் சிக்காத அழகுணர்வு. தோற்ற அழகில்லை. மனதளவில் கற்பனையில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் செடியான தாபம் - அதை அடக்க எந்த அழகாலும் முடியாது. அந்த தாபத்தை விளக்கலாம் - பாடல், கவிதை, ஓவியம் என பல பரிமாணங்களில். ஆனால் அந்த தாபத்தை அணைக்க முடியாது. (எனக்கு ஞானமும் மோட்சமும் ஒண்ணும் வேணாம். அழகு போரும். அழகோட வெஷம் என்னை எரிய வச்சாலும் சரி.. எனக்கு இன்னமும் அழகு வேணும். கால்வெரல் நுனி முதல் தலைமயிர் எழை வரை நெறைஞ்சிருக்கிற ஜீவனோட பேரழகு இருக்கே அது வேணும்… அழகுன்னா என்னதுன்னு இப்ப அண்ணா பாடிக்காட்டிட்டார். அழகு அவகிட்டயா இருக்கு? என் தாபத்திலே இருக்கு பாலு. )

கதையின் கடைசிப் பகுதி ராமனின் நீண்ட அரற்றலாக அமைந்திருக்கிறது. அதிலிருந்து எனக்குப் புரிந்தது கீழே:

இப்புலம்பல்கள் சந்திராவின் அழகு மேல் இருந்த மோகமா, உலக அழகுகள் மேலிருந்து தணியாத வேட்கையா? (வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு)
இல்லை சுத்த சங்கீத பித்தா? (அதுலே ஒவ்வொரு துளியும் சங்கீதம்னா? சுத்த சங்கீதம். காதாலே கேக்கிற சங்கீதம் இல்லே… இப்ப இந்தா அண்ணா இன்னமும் அதேதான் பாடிண்டிருக்கார்.)

காதால் கேட்கும் சங்கீதம் அல்ல. அது மனித மனதின் லயம். ஓயாத அரற்றல். தோலைத் தாண்டி வெடித்தெழும் தாபம். அதை வெளியேற்ற வழிதெரியாததே புலம்பல்களாக ராமனிடம் வெளிப்படுகிறது. வார்த்தைகளாக விரல் நுனி வழியே வெளியேறும் சங்கீதம் அதில் ஒரு பாவனை மட்டுமே. தாயார் பாதம் கதையிலும் இது வெளிப்படுகிறது.

இசை மூலம், எழுத்தின் மூலம் தன்னால்  முழுமையாக வெளிப்படுத்த இயலாத உணர்வுகளை சுப்பு ஐயர் சுலபமாக பாடல்களாகப் பாடிவிடுகிறார். கண்டிப்பாக தாபம் இல்லாமல் இல்லை. ஆனால் அதை அணைக்கும் வழி சந்திரா உட்பட யாரிடமும் இல்லை. சொல்லப்போனால், அந்த தாபம் அடங்கினால் ராமன் ஒன்றுமே கிடையாது. அந்த தாபமே அவரது படைப்பின் ஊற்று. அதில் சந்திரா போன்ற பெண்கள் நெய் போல் தூண்டுகோல்கள் மட்டுமே. அவர்களை அடைவதால் அந்த தாபம் தணியாது.

குமுறிக் குமுறி இசையாக வெளிப்படும் தாபம் சுப்பு ஐயருடையது. அது நேரடியாக ராமனின் இதயத்தை சுட்டுகிறது. தன்னால் விவரிக்க இயலாத உணர்வுகளை இப்படி அப்பட்டமாக போட்டு உடைக்கிறானே? (‘படுபாவி, அவன் கையிலே இருக்கறது நாகஸ்வரமா வேற எதுவுமா?நாசமா போக..கொல்றானே…மனுஷன மெழுகா ஆக்கிடறானே’).

அதே போல் பெண்மையின் உருவம் ராமனுக்குள் இயல்பான சலனத்தையும், பிரமிப்பையும் கலந்து உண்டாக்குகிறது. மோகமுள் பாபுவுக்கு யமுனா வெங்கலச் விக்கிரகம் என்பது போல் பெண்மைக்கு ஒரு ஆதிசக்தி இருப்பதை ராமன் குறிப்பால் உணர்த்திக்கொண்டேயிருக்கிறார். (இல்லே…திருச்செந்தூர் போகணும்னு தோணறது. ஒண்ணுமில்லே, திருச்செந்தூரிலே ஒரு மயில்கழுத்து பட்டு வாங்கி சாத்தணும்… நூத்தம்பது ரூபாயிலே கெடைக்கும்ல?’ ‘அது பாத்துக்கலாம்…யாருக்கு?’ ‘வள்ளிக்குதான்…நீலம்னா அது காட்டோட நெறம்ல? தெய்வானைக்குன்னா மாம்பழ நெறம்னு சொல்லுவாங்க’)

பெண்மையை சக்தி ரூபமாக, அம்பாள் வடிவமாக பல எழுத்தாளர்கள் உருவகப்படுத்தியுள்ளனர். லா.சா.ரா , தி.ஜா எனப் பலர். சக்தி ரூபத்தில் தலைகவிழ்ந்து ஆராதிப்பதும், பெண் ரூபத்தில் அடைய நினைப்பதும் ஒருங்கே நிகழ்வது தான். இக்கதையிலும் ராமனுக்கு அதுதான் நேர்கிறது. ஏதோ சந்திராவின் தாபத்துக்கு பரிகாரம் தேடுவது போல் மயில்கழுத்து பட்டு வாங்கி வள்ளிக்குச் சாத்தவேண்டும் என்கிறார்.

இசை மற்றும் தாபம் பாலுவையும் உலுக்குகிறது. எப்படி?

பாலு கைவிடப்பட்ட கருவி போல் தாபத்தை பாவிக்கிறார். இசை ஒரு கால இயந்திரம் போல் அவரை அவரது இளமைக்கு அழைத்துச் செல்கிறது(பாலசுப்ரமணியன் படபடப்புடன் எதிர்பார்த்தபாட்டு அடுத்து வந்தது ’அலர்ஸர பரிதாபம்’ . அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதிதிருநாள் பாட்டு).

ஆனால் தன்னுணர்வை மீட்டும் துடுப்பாக இசை பாலுவுக்கு  எடுபடவில்லை. ஒரு நடைமுறையாளன், நவீன சிந்தனையாளன் எப்படி யோசிப்பானோ அப்படி செல்கிறது அவரது சிந்தனை திரி. தாபம் என்பதை ஆண் - பெண் என்ற லெளகீக அடையாளத்திலிருந்து மானுட துயரமாக அவருக்குத் தோன்றுகிறது. என்னை கைவிட்டுவிட்டாயா? ஏன் இவ்வளவு தனிமை என கழிவிரக்கம் தொண்டை அடைக்கும் துக்கமாக மாறுகிறது. (கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன? சட்டென்று எரிச்சலும் நிம்மதியின்மையும் எழ பாலசுப்ரமணியன் தன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டார்)

இசை பற்றி எவ்வளவு எழுதினாலும் சொல்லமுடியாதவற்றிலிருந்து சொல்லமுடியாததை விவரிப்பது போலவே இருக்கும். அள்ளிப் பருகும் கையளவு தண்ணீரில் மிதக்கும் முழு நிலவு போல். களையும், உடையும்,சலசலக்கும் - ஒருபோதும் கைப்பற்ற முடியாது.

இக்கதையில் ஒரே இசையை இரு பெரும் சிந்தனை தூண்களில் ஏற்றி வைத்திருக்கிறார் ஜெமோ. சக்திரூப அன்னை ஆதிவடிவம். ஆனால் சாதாரண மனதுக்கு தாபம். மற்றொரு நோக்கில் கைவிடப்பட்ட மிருகமாக மாறிவிட்டதாக மானிடனை நினைத்து கழிவிரக்கம் தாபமாக மாறுகிறது. இரண்டிலும் தாபமே அடிப்படை உணர்வு. ஆனால் ஒவ்வொரு மனதின் இயல்புக்கு ஏற்றவாறு இசை மூலம் அத்தாபம் புதுப்புது அர்த்தங்களாக உருமாறுகிறது. இசையின் இயல்பே அதுதான்.

No comments:

Post a Comment